மாவட்ட செய்திகள்

கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 12 பேர் பலி + "||" + Samrajnagar district In the village of Sulawadi Temple offerings meal 12 killed

கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 12 பேர் பலி

கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 12 பேர் பலி
கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட ஒரு சிறுவன் உள்பட 12 பேர் பலி. 65 பக்தர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பிரசாதத்தில் விஷம் கலந்ததாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளேகால்,

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் அமைந்துள்ளது கிச்சுகுத்தி மாரம்மா கோவில்.

இக்கோவிலில், அம்மன் மாரம்மாவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கோவிலில் கோபுரம் கட்டும் திருப்பணி தொடங்கியது.


தற்போது அப்பணி முடிந்து கோபுரத்தின் மேல் கலசம் வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி சுலவாடி கிராமத்தைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் கூடினர். இதில் 25-க்கும் மேற்பட்டோர் அய்யப்ப பக்தர்கள் ஆவர்.

கோபுரத்தின் மீது கலசம் வைக்கப்படுவதையொட்டி காலை முதலே கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. அதேபோல் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தக்காளி சாதம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதமும் தயார் செய்யப்பட் டது. பின்னர் கோபுரத்தின் மீது கலசங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்களில் சிலர் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். சிலர் வாந்தி, தலைவலியால் துடித்தனர்.

இதையடுத்து உடனடியாக கோவில் நிர்வாகிகள் ஆம்புலன்சை வரவழைத்து பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பிரசாதம் சாப்பிட்ட பல பக்தர்களுக்கும் உடல்நலக்குறைவும், வாந்தி-மயக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து கொள்ளேகால், ராமபுரா, காமகெரே ஆகிய பகுதிகளில் உள்ள ஆம்புலன்சு களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் ஆம்புலன்சுகள் விரைந்து வந்தன. பாதிக்கப்பட்ட பக்தர்கள் அனைவரையும் மருத்துவ உதவியாளர்கள் ஆம்புலன்சுகளில் ஏற்றிச்சென்றனர்.

இதில் சிலர் கொள்ளேகால் அரசு ஆஸ்பத்திரிக்கும், சிலர் ராமபுராவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கும், மீதமுள்ளவர்கள் காமகெரேவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் தனியாக வார்டுகள் அமைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் சிகிச்சை பலனின்றி 8 பேர் பலியானார்கள். மேலும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் மேல்சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மைசூரு கே.ஆர். ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் காவேரி, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கோபால் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட பக்தர்களை பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் கலெக்டர் காவேரி ஆறுதல் கூறினார்.

அதையடுத்து டாக்டர்களை சந்தித்த கலெக்டர் காவேரி, பாதிக்கப்பட்டவர் களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.

இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரி கோபால் நிருபர்களிடம் கூறியதாவது:-

“மாரம்மா கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட அனைவரும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு சிறுவன் உள்பட 12 பேர் இறந்துள்ளனர். அவர்கள் சுலவாடி கிராமத்தைச் சேர்ந்த கோபியம்மா(வயது 35), சாந்தா(20), எம்.ஜி. தொட்டி கிராமத்தைச் சேர்ந்த பாப்பண்ணா(55), வட்டரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த அனிதா(14), அனில்(12), பீதரஹள்ளியைச் சேர்ந்த சாந்தராஜு(30), தொட்டய்யணா கிராமத்தைச் சேர்ந்த அண்ணய்யப்பா(70), கிருஷ்ணா நாயக்(35), ராசய்யா(37) என்பது தெரியவந்துள்ளது. மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். அவர்களின் பெயர், விவரம் இன்னும் கிடைக்கவில்லை. தற்போது ஆஸ்பத்திரிகளில் 65 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தில் விஷம் கலந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் மாரம்மா கோவிலை நிர்வகிப்பதில் 2 பிரிவினருக்கு இடையே கோஷ்டி மோதல் இருந்துள்ளது. அதன் காரணமாக ஒரு கோஷ்டியினர் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவில் விஷத்தை கலந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.”

இவ்வாறு அவர் கூறினார்.

மாரம்மா கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 12பேர் இறந்துள்ளதாலும், 65 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாலும் சுலவாடி கிராமம் உள்பட அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஹனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மேந்திர குமார் மீனா தலைமையிலான தனிப்படையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்னும் பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதால் இச்சம்பவத்தில் சாவு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே பிரசாதத்தில் விஷம் கலந்ததாக சந்தேகத்தின்பேரில் சுலவாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பி, மாதேஷ் ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலியான சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு சம்பவம் குறித்து அறிந்த முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவுக்கு சென்றார். அங்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவரும் பக்தர்களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும் பார்த்து ஆறுதல் கூறினார்.

மேலும் பலியானவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்கிடையே பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரசாதத்தை தின்ற 300 பறவைகள் செத்தன

மாரம்மா கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட ஒரு சிறுவன் உள்பட 12 பேர் பலியானார்கள். 65 பேர் தீவிர சிகிச்சை பெற்று வரு கிறார்கள். இந்த நிலையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டதுபோக மீதமிருந்த பிரசாதம் கோவிலின் பின்புறம் வீசப்பட்டு இருந்தது. அதை தின்ற 60 காகங்கள் உள்பட 300 பறவைகள் பரிதாபமாக செத்து விழுந்தன. அவைகள் கோவிலைச் சுற்றி ஆங்காங்கே கிடந்தன. இதனால் அங்கு ஏராளமான காகங்கள் திரண்டு கோவிலைச் சுற்றி பறந்தபடி இருந்தன. இதன் காரணமாக அந்த இடமே சோகமாக காட்சி அளித்தது.

தமிழகத்திற்கு பாதயாத்திரையாக வந்தவர்கள்

பாதிக்கப்பட்டவர்களில் பலர் தமிழகத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக வந்தவர்கள். அவர்கள் மாரம்மா கோவில் வழியாக நடந்து வந்தபோது அங்கிருந்த பூசாரி, மாரம்மாவை தரிசித்துவிட்டு பிரசாதம் பெற்றுச் செல்லுமாறு அவர்களிடம் கூறினார். அதன்பேரில் அவர்கள் மாரம்மாவை தரிசனம் செய்துவிட்டு, பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பல்லடத்தில் மொபட் மீது பஸ் மோதல்; கட்டிட தொழிலாளி பரிதாப சாவு பொதுமக்கள் போராட்டம்
பல்லடத்தில் மொபட் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் கட்டிடதொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பஸ்சை தாக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. திருச்சி அருகே முத்தையம்பாளையத்தில் கோவில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 7 பேர் பலி
திருச்சி அருகே முத்தையம்பாளையத்தில் கோவில் விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 7 பேர் இறந்தனர். பூசாரியிடம் பிடிக்காசு வாங்க முயன்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து உள்ளது.
3. பஸ் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி: போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
பஸ் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலியானதை தொடர்ந்து போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4. தஞ்சை அருகே, ரோட்டு ஓர வயலில் பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி; 29 பேர் படுகாயம்
தஞ்சை அருகே ரோட்டு ஓர வயலில் பஸ் கவிழ்ந்ததில் வாலிபர் பலியானார். அவர் இறங்குவதற்காக படிக்கட்டிற்கு வந்தபோது உடல் நசுங்கி பலியானது தெரிய வந்தது. 29 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. மரத்தில் கார் மோதி விபத்து; அ.ம.மு.க. பிரமுகர் மனைவி பலி; குடும்பத்தினர் 7 பேர் படுகாயம்
கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் அ.ம.மு.க. பிரமுகரின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் 7 பேர் படுகாயம் அடைந்தார்கள்.