காங்கேயம் படியாண்டிப்பாளையம் பகுதியில் உயர்மின் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்; விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தில் மனு


காங்கேயம் படியாண்டிப்பாளையம் பகுதியில் உயர்மின் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்; விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 14 Dec 2018 11:15 PM GMT (Updated: 14 Dec 2018 11:01 PM GMT)

காங்கேயம் படியாண்டிப்பாளையம் பகுதியில் உயர்மின் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா வீரணம்பாளையம், படியாண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் நேற்று மாலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

விருதுநகரில் இருந்து கோவைக்கு உயர்மின் கோபுரங்களை காங்கேயம் ஒன்றியத்தில் சுக்குட்டிப்பாளையத்தில் தொடங்கி முதிபாறை, படியாண்டிப்பாளையம், சகாயபுரம், கோவில்பாளையம் வழியாக அமைப்பதற்கு நில அளவை பணி நடந்து வருகிறது. இந்த மின்கோபுரம் அமைய உள்ள படியாண்டிப்பாளையம் பகுதி குடியிருப்புகள் நிறைந்த சிற்றூர். ½ ஏக்கர், 1 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை வைத்து வாழ்க்கை நடத்தும் சிறு, குறு விவசாயிகள் அதிகம் உள்ளனர்.

மேலும் தேங்காய் களம், எண்ணெய் ஆலை, அரிசி ஆலை, சரக்கு சேமிப்பு கிடங்கு, நூற்பாலை ஆகிய சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியாகும். எங்கள் பகுதி வழியாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் எங்கள் கருத்தையும் கேட்காமல் இந்த மின்கோபுரம் அமைப்பது எங்கள் பகுதியில் தொழில் வளர்ச்சி, விவசாயம் மற்றும் மேய்ச்சல் நில மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை முற்றிலும் அழிக்கும்.

எங்கள் நில மதிப்பும் சரிந்து விடும். காங்கேயத்துக்கு மிக அருகில் எங்கள் ஊர் இருப்பதால் தொழில் நிறுவனங்கள் அமைக்க நிலங்களை வாங்கியிருக்கிறார்கள். இந்த உயர்மின் கோபுரம் அமைவதால் பல தொழிற்சாலைகள் அமைவது தடுக்கப்பட்டு எங்கள் பகுதி மக்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும்.

எனவே எங்கள் ஊர் வழியாக இந்த உயர்மின் கோபுர பாதை அமைவது எங்கள் வாழ்வாதாரம், உரிமையை பறிக்கும் செயலாகும். இந்த பிரச்சினையில் தலையிட்டு எங்கள் பகுதியில் உயர் மின்கோபுரம் அமைய இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story