கொடைக்கானல் பகுதியில் புதிய மாஸ்டர் பிளான் திட்டம் அமல்படுத்தப்படுமா?


கொடைக்கானல் பகுதியில் புதிய மாஸ்டர் பிளான் திட்டம் அமல்படுத்தப்படுமா?
x
தினத்தந்தி 15 Dec 2018 4:45 AM IST (Updated: 15 Dec 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் பகுதியில் புதிய மாஸ்டர் பிளான் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல்,

சுற்றுலா தலமான கொடைக்கானல் பகுதிகளில் குடியிருப்புகள், கட்டிடங்கள் அதிகரித்து வருகின்றன. சீட்டுக்கட்டை அடுக்கி வைத்தாற்போல், குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதையடுத்து அதிகரித்து வரும் கட்டிடங்களை முறைப்படுத்துவதற்காக கடந்த 1993-ம் ஆண்டு மாஸ்டர் பிளான் என்னும் முழுமைத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அதன்படி தரைத்தளம் மற்றும் முதல்தளம் என 7 மீட்டருக்கு மேலும், 2 ஆயிரத்து 500 சதுர அடிக்கு மேலும் கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டது. இதற்காக கொடைக்கானல் நகர், பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இந்த திட்டத்தினை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைப்பது எனவும் அரசு உத்தரவிட்டது.

இதற்கு மேல் கட்டிடங்கள் கட்ட விரும்பினால் மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ள செயல்படும் தனி கமிட்டியில் அனுமதி பெற வேண்டும். இந்த திட்டத்தினை மீறி சுமார் 1,532 கட்டிடங்கள் கட்டப்பட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது.இதையடுத்து விதிகளை மீறிய 75 வணிக கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. முதற்கட்டமாக 16 வணிக கட்டிடங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்தநிலையில் 1993-ம் ஆண்டுக்கு பின்னர் மாஸ்டர் பிளான் திருத்தி அமைக்கப்படவில்லை. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழு அமைக்கப்பட்டு, நகரில் உள்ள அனைத்து பகுதிகளும் ஆய்வு செய்யப்பட்டு, பல மண்டலங்கள் மாற்றம் செய்யப்பட்டதுடன், 10 மீட்டர் உயரம் வரை கட்டிடங்கள் கட்டலாம் என பரிந்துரை செய்தது. இந்த திட்டமும் இதுவரை செயல்படுத்தப்படாமல் உள்ளது.

இதனால் ஏற்கனவே கட்டிடங்கள் கட்டியுள்ளவர்களும், புதிதாக கட்டிடங்கள் கட்ட உள்ளவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் நகரம் வளர்ச்சி அடையாத நிலையில் உள்ளது. எனவே புதிய மாஸ்டர் பிளான் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி ஏற்கனவே விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களையும் முறைப்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story