கிங் சர்க்கிளில் 18 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசம்


கிங் சர்க்கிளில் 18 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 15 Dec 2018 5:18 AM IST (Updated: 15 Dec 2018 5:18 AM IST)
t-max-icont-min-icon

கிங்சர்க்கிளில் 18 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாகின.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

மும்பை கிங்சர்க்கிள் சுந்தர் கமலா நகர் குடிசை பகுதி உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்குள்ள காலி இடத்தில் தங்களது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்து இருந்தனர். அதிகாலை 3 மணியளவில் திடீரென மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தன.

இதைப்பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

இதுபற்றி தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 18 மோட்டார் சைக்கிள்கள் தீயில் முற்றிலும் எரிந்து நாசமாகின.

யாரோ மர்மநபர்கள் தான் மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்து விட்டதாக அவற்றின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். உண்மையிலேயே மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதா? அல்லது தீ விபத்தா? என்பதை கண்டறிய சயான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story