புதுவை அரசு சார்பில் ரூ.100 கோடி பிணைய பத்திரங்கள் ஏலம்


புதுவை அரசு சார்பில் ரூ.100 கோடி பிணைய பத்திரங்கள் ஏலம்
x
தினத்தந்தி 15 Dec 2018 5:45 AM IST (Updated: 15 Dec 2018 5:45 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அரசு சார்பில் ரூ.100 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் விடப்பட உள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு நிதித்துறை செயலாளர் கந்தவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி அரசு ரூ.100 கோடி மதிப்புள்ள 11 ஆண்டு கால பிணைய பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இந்த பிணைய பத்திரங்கள் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்திற்கும் அதன் பின்னர் ரூ.10 ஆயிரத்தின் மடங்குகளிலும் ஏலம்விடப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை (கோட்டை) அலுவலகத்தில் வருகிற 18–ந் தேதி ஏலம் விடப்படும்.

ஆர்வம் உள்ளவர்கள், நிறுவனங்கள், கூட்டமைப்பு குழுமங்கள், நிதி நிறுவனங்கள், வருங்கால வைப்புநிதி நிறுவனங்கள், பொறுப்புரிமை நிதியங்கள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகள் முதலியன ஒரு கூட்டு போட்டியில்லா ஏலத்தை அதனை சார்ந்த அனைத்து கூறுகளுக்கும் மின்னணு முறையில் பேசி முடிவு செய்த இந்திய ரிசர்வ் வங்கியின் உட்பிரிவு வங்கியியல் தீர்வு மூலம் மும்பை கோட்டையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் இணைய தள முகவரியில் www.rbi.org.in வருகிற 18–ந்தேதி காலை 10–30 மணி முதல் 11–30 மணிக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். போட்டி ஏலத்தில் பங்கு பெறும் உறுப்பினர்கள் மின்னணு முறையில் e.kuber மூலம் அன்று பிற்பகல் 12 மணிக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

ஏலத்தின் முடிவுகள் வருகிற 18–ந்தேதி மும்பை கோட்டையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தனது இணையதள முகவரியில் வெளியிடும். ஏலம் கிடைக்கப்பெற்றவர்கள் தங்களது ஏலங்களில் தெரிவிக்கப்பட்ட பிணையப் பத்திரங்களுக்கான விலையை இந்திய ரிசர்வ் வங்கி மும்பை(கோட்டை) அல்லது சென்னையில் செலுத்தத்தக்க வகையிலான வங்கியாளர் காசோலை அல்லது கேட்பு வரைவோலையை வருகிற 19–ந்தேதி வங்கிப்பணி நேரம் முடிவதற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அரசு பிணைய பத்திரங்களுக்கு ஏலத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் தீர்மானிக்கப்படக்கூடிய விதத்தில் வட்டி வழங்கப்படும். இந்த வட்டி 6 மாதத்திற்கு ஒரு முறை அதாவது ஜூன் மாதம் 19–ந்தேதி மற்றும் அக்டோபர் மாதம் 19–ந் தேதி வழங்கப்படும். இந்த பிணைய பத்திரங்கள் மாற்றிக் கொடுக்கத்தக்க தகுதியுடையதாகும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story