மதம், சாதி உணர்வுகளை தூண்டும் தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
மதம் மற்றும் சாதி ரீதியான உணர்வுகளை தூண்டும் தகவல்களை சமூக வலைதளங்களின் மூலமாக பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் எச்சரித்து உள்ளார்.
தர்மபுரி,
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சமூக வலைதளங்களின் மூலமாக மதம் மற்றும் சாதி ரீதியான உணர்வுகளை தூண்டும் வகையிலான தகவல்களை சில சமூக விரோதிகள் பரப்புவதாக தகவல் கிடைத்தது. இத்தகைய செயலில் ஈடுபடுவோரை கண்காணிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய தகவல்களை பரப்புவோரை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கைகளையும் போலீசார் எடுத்து வருகிறார்கள்.
அரூர் தாலுகா கோட்டப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குபட்ட நரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சிலர் வாட்ஸ்–அப் மூலமாக குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களை பற்றி தரக்குறைவாக விமர்சித்து பேசியதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகவல் தொழில்நுட்பம் மற்றும் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த பிரச்சினையில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 8 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மதம் மற்றும் சாதி ரீதியாக தரக்குறைவாகவும், அவதூறாகவும் விமர்சிக்கும் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் தெரிவித்து உள்ளார்.