அரசு பள்ளிகளில் படிக்கும் 1,288 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்


அரசு பள்ளிகளில் படிக்கும் 1,288 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்
x
தினத்தந்தி 16 Dec 2018 4:00 AM IST (Updated: 15 Dec 2018 8:18 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 1,288 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

பென்னாகரம், 

தர்மபுரி மாவட்டம் தொப்பூர், கடகத்தூர், அதகப்பாடி, பென்னாகரம் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 1,288 மாணவ–மாணவிகளுக்கு ரூ.48.49 லட்சம் மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லாகான், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு)பொன்முடி, தலைமை ஆசிரியர்கள் விஜயலட்சுமி, முனிமாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். விழாவில் அமைச்சர் பேசியதாவது:– தமிழ்நாட்டில் 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றிட முதல்–அமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதற்காக ரூ.152.20 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளார். இதனால் ரூ.800 முதல் ரூ. 1000 வரை என மிகக்குறைந்த கல்விக்கட்டணத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் 25,453 பள்ளி மாணவ– மாணவிகளுக்கு ரூ.9 கோடியே 35 லட்சத்து 14 ஆயிரத்து 322 மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. மாணவ–மாணவிகளின் பள்ளி இடைநிற்றலை தடுப்பதற்காக 14 வகையான பொருட்களை வழங்கும் திட்டம் உள்ளிட்ட தொலைநோக்கு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

நமது மாவட்டத்தில் பள்ளிக்கல்வியை முடித்த மாணவர்கள் வெளியூர்களுக்கு உயர்கல்விக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது அந்த நிலை மாறி உள்ளது. தர்மபுரியிலேயே அரசு சட்டக்கல்லூரி, அரசு மருத்துவக்கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி ஆகியவை செயல்படுகின்றன. காரிமங்கலத்தில் அரசு மகளிர் கல்லூரி, பாலக்கோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை செயல்படுவதால் இந்த பகுதியிலேயே கல்வி கற்கும் வாய்ப்பு உருவாகி உள்ளன.

மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, அரூர் ஆகிய புதிய கல்வி மாவட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளதால் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளின் அலுவல் பணிச்சுமை குறைந்துள்ளது. அரசு பள்ளிகளில் மாணவ–மாணவிகள் நல்லமுறையில் படித்து அதிக மதிப்பெண் பெற்று தங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ளவேண்டும்

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

விழாவில் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் வேலுமணி, பொன்னுவேல், ஆறுமுகம், கோவிந்தசாமி, மதிவாணன், சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் டி.ஆர்.மதியழகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்ரமணி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story