விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம் வேளாண்மை அதிகாரி தகவல்
விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் மூலம் எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்பீடுகளுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயிர்களை பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் விவசாயிகள் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கடைபிடிக்கவும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.
நடப்பு பருவத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நவரை நெல், நிலக்கடலை, மக்காச்சோளம், உளுந்து, துவரை மற்றும் கரும்பு ஆகிய பயிர்களுக்கும், கிராம அளவில் சோளம், கம்பு மற்றும் எள் ஆகியப் பயிர்களுக்கும், பிர்கா அளவில் அறிவிக்கைச் செய்யப்பட்டு விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்து வருகின்றனர்.
ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.378, நிலக்கடலை ரூ.338, மக்காச்சோளம் ரூ.225, உளுந்து ரூ.215, துவரை ரூ.215, கரும்பு ரூ.960, சோளம் ரூ.140, கம்பு ரூ.135 மற்றும் எள் ரூ.128 என்ற அளவில் விவசாயிகள் பிரீமியம் செலுத்த வேண்டும். மீதமுள்ள பிரீமியத் தொகையை மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்காக மானியமாக செலுத்துகின்றன.
நவரை நெல் பயிருக்கு பிரீமியம் செலுத்த கடைசி நாள் பிப்ரவரி மாதம் 15-ந் தேதி ஆகும். பிற பயிர்களுக்கு ஜனவரி 15-ந் தேதி கடைசி நாளாகும். கரும்பு பயிருக்கு அக்டோபர் 30-ந் தேதி ஆகும்.
கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறும் வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கட்டாயம் பதிவு செய்யப்படுவார்கள். கடன் பெறாத விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் அல்லது இ-சேவை மையங்களில் கடைசி நாளுக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விவசாயிகள் இதற்கான முன் மொழிவு படிவத்துடன், சிட்டா, அடங்கல், ஆதார் எண் நகல் மற்றும் வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை கொண்டு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் பயிர் செய்துள்ள விவரங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் விடுபடாது பதிவு செய்ய வேண்டும். மேலும், இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும் விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாது பதிவு செய்யப்படவும் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் செல்வசேகர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story