பண்ணவாடியில் பரிசலில் பயணம் செய்வோருக்கு ‘லைப் ஜாக்கெட்’ வழங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
பண்ணவாடியில் பரிசலில் பயணம் செய்வோருக்கு ‘லைப் ஜாக்கெட்‘ வழங்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொளத்தூர்,
மேட்டூர் அணையின் நீர்தேக்கப்பகுதியான பண்ணவாடி பரிசல் துறையில் தர்மபுரி மாவட்டத்தையும், சேலம் மாவட்டத்தையும் நீர்வழி போக்குவரத்தில் இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது.இந்த விசைப்படகு மூலம் நாள்தோறும் 2 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களும் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தின் காவிரி கரையோர கிராமங்களான ஒட்டனூர், நாகமரை, ஏரியூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் மேட்டூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விசைப்படகில் தினமும் வந்து செல்கின்றனர்.
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உள்ளது. கடல் போல் காட்சியளிக்கும் பண்ணவாடி பரிசல் துறையில் இயக்கப்பட்டு வரும் விசைப்படகில் பயணம் செய்பவர்களுக்கு ‘லைப் ஜாக்கெட்‘ எனப்படும் பாதுகாப்பு உடை வழங்கப்படுவதில்லை.
மேலும் விசைப்படகில் இணைக்கப்பட்டுள்ள ராட்சத பரிசல்களில் சைக்கிள், மோட்டார்சைக்கிள் போன்ற வாகனங்களையும் கொண்டு செல்கிறார்கள். இவ்வாறு கொண்டு செல்லும் அந்த வாகனங்களின் மீது அமர்ந்தபடியே பயணம் செய்கிறார்கள். இவர்களும் இந்த ‘லைப் ஜாக்கெட்‘ அணியாமலேயே பயணம் செய்து வருகின்றனர் . எனவே விசைப்படகில் பயணம் செய்பவர்களுக்கு ‘லைப் ஜாக்கெட்‘ வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து அறிவுறுத்தியும்கூட இந்த ஆபத்தான பயணம் நீடித்து கொண்டே வருகிறது. விபரீதம் நிகழும் முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசைப்படகில் பயணிப்போருக்கு பாதுகாப்பு கவசம் (லைப் ஜாக்கெட்) வழங்கி ஆபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story