4 நாட்களில் சேதமடைந்தது: கிருஷ்ணகிரி சாலைகளில் மோசமான வேகத்தடைகள் வாகன ஓட்டிகள் கடும் அவதி
கிருஷ்ணகிரி சாலைகளில் அமைக்கப்பட்ட 4 நாட்களில் வேகத்தடை சேதமடைந்தது. இந்த வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் பள்ளிகள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் ஏற்கனவே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில், பழைய வீட்டு வசதி வாரியம் அருகில், புனித அன்னாள் மகளிர் பள்ளி அருகில் வேகத்தடைகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு புதிதாக அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகிலும், தனியார் மருத்துவமனை அருகிலும் ரப்பரால் ஆன வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. தரமற்று அமைக்கப்பட்டிருந்த காரணத்தால் அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
மேலும் பல இருசக்கர வாகனங்கள் பழுதானது. அவ்வாறு அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை நேற்று முன்தினம் சேதமடைந்தது. மேலும் கூர்மையான ஆணிகளும் ஆங்காங்கே கிடந்ததால் பல இருசக்கர வாகனங்கள் பழுதானது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் ஏற்கனவே வேகத்தடைகள் உள்ளன. மேலும் அரசு மகளிர் பள்ளி மற்றும் புனித அன்னாள் மகளிர் பள்ளிக்கு மாணவிகள் வரும் நேரத்திலும், பள்ளியில் இருந்து செல்லக்கூடிய நேரத்திலும் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பணியில் நின்று மாணவிகள் சாலையை கடக்க உதவி செய்து வருகிறார்கள்.
இந்த நேரத்தில் தேவையின்றி மேலும் சில வேகத்தடைகள் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வேகத்தடைகளும் தரமற்ற நிலையில் அமைத்திருப்பதால் வாகன ஓட்டிகள் அனை வரும் மிகுந்த சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் வாகனங்களும் பழுதாகி வருகின்றன. ரப்பரால் அமைக்கப்பட்ட அந்த வேகத்தடை அமைக்கப்பட்ட 4 நாட்களில் சேதமடைந்துள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையில் பெரும்பாலானவர்கள் மெதுவாகவே வாகனங்களை இயக்கி செல்கிறார்கள். எனவே கிருஷ்ணகிரியில் சென்னை சாலை, பெங்களூரு சாலை உள்ளிட்ட இடங்களில் தேவையற்ற வேகத்தடைகளை அகற்றிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
Related Tags :
Next Story