கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் திம்மநாயக்கன்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைக்கு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், இந்த ஆட்சியிலே என்ன நன்மை இருக்கிறது என்று கேட்கிறார்கள். எல்லா துறையிலும் சிறந்து விளங்குகின்ற முதல் மாநிலம் தமிழ்நாடு என்று டெல்லிக்கு அழைத்து, துணை ஜனாதிபதி தலைமையிலே பரிசு கொடுக்கின்ற அளவிற்கு நிர்வாகம் செய்யக்கூடிய அரசாக இன்றைக்கு அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இவையெல்லாம் எதிர்க்கட்சி தலைவருக்குத் தெரியாது. ஏனென்றால், எந்த காலத்தில் இவர்கள் திறமையான ஆட்சி செய்தார்கள்?.
பருவ காலங்களில் பொழிகின்ற மழைநீர் வீணாகக் கடலிலே கலக்காமல் தடுப்பதற்கு ஆங்காங்கே ஓடைகள், குளங்களிலே தண்ணீரை சேமிப்பதற்கு தேவையான திட்டங்களை வகுத்து, தடுப்பணைகள் கட்டப்பட்டு, அவற்றை நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கிறோம். இதனால், நிலத்தடிநீர் உயர்ந்து விவசாயத்திற்கும், வறட்சியான காலத்திலே குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தையும், மூன்றாண்டுகால திட்டமாக உருவாக்கி அதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி, அந்த திட்டம் முதன் முதலாக இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது.
புயல், வெள்ளம், வறட்சி வருகின்ற காலங்களில் நிவாரணம் வழங்கக்கூடிய ஒரே அரசு இந்த அரசுதான். கஜா புயலினால் பல மாவட்டங்கள் வாழ்வாதாரமே அழிகின்ற அளவிற்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் சீர் செய்திருக்கிறோம். அந்த பகுதி மக்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்துக்கொண்டு வருகிறது. இவையெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்களின் கண்ணுக்கே தெரியாது. ஏனென்றால், அவர்கள் புயலையும் பார்த்ததில்லை, நிவாரண உதவியும் வழங்கியது கிடையாது.
கடந்த காலத்தை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். 2011-க்கு முன்பு தி.மு.க. ஆட்சி எப்படி இருந்தது. 2011-க்கு பிறகு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபொழுதும், அவர் மறைந்த பிறகும், அரசு எந்த அளவிற்கு மக்களுக்கு நன்மை செய்கின்றது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இன்றைக்கு எதிர்க்கட்சியின் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரசாரங்களை செய்து வருகிறார்கள். அவைகளெல்லாம் முறியடிக்கப்பட்டு, ஜெயலலிதா என்ன திட்டங்கள் கொண்டு வந்தாரோ அத்தனை திட்டங்களையும் இன்றைக்கு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதேபோல, இன்றைக்கு எல்லா துறைகளும் முதன்மையாக விளங்கக்கூடிய அளவிற்கு ஜெயலலிதாவின் அரசு இரவு, பகல் பாராமல் பாடுபட்டு அத்தனை மக்களுக்கும் நன்மையான திட்டங்களை அளித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, கே.பி.பி.பாஸ்கர், பொன்.சரஸ்வதி, சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story