பதற்றமான பகுதியில் தொடர் கண்காணிப்பு: தூத்துக்குடியில் பாதுகாப்புக்காக 1,800 போலீசார் குவிப்பு சமூக விரோதிகள் குறித்து தகவல் தெரிவிக்க அதிகாரி வேண்டுகோள்
தூத்துக்குடியில் பாதுகாப்புக்காக 1,800 போலீசார் குவிக்கப்பட உள்ளனர். பதற்றமான பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. சமூக விரோதிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்து வந்தது. நேற்று மதியம் இந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பு கூறப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22, 23-ந்தேதிகளில் ஏற்பட்ட கலவரத்தை போல் அசம்பாவித சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்காக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறியதாவது;-
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் மீண்டும் பதற்றம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள போலீசார் அனைவரும் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். பதற்றமான பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அயல் பணிக்கு சென்ற போலீசார் அனைவரும் மீண்டும் வரவழைக்கப்பட உள்ளனர்.
கடந்த முறை கலவரம் ஏற்பட்ட பகுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் வஜ்ரா, வருண் போன்ற கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அதே போல் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 1,800 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் ஜனநாயக முறைப்படி சட்ட விதிகளுக்கு உட்பட்டு தங்களுடைய கோரிக்கைகளை வெளிபடுத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்களின்போது அந்நிய நபர்கள் ஊடுருவ வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் செயல்படும் சமூக விரோதிகள் குறித்து பொதுமக்கள் அறிந்தால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு 0461-2340650, 95141-44100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு போலீசாருக்கு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story