வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்ய சட்டமன்ற பொது கணக்கு குழு 19-ந் தேதி நெல்லை வருகை கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்ய சட்டமன்ற பொது கணக்கு குழு வருகிற 19-ந் தேதி (புதன்கிழமை) நெல்லை வருகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
நெல்லை,
தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு வருகை தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் துரைமுருகன் தலைமையில் குழு உறுப்பினர்கள் டி.ஆர்.ராமச்சந்திரன் (குன்னம்), ராஜேந்திரன் (சேலம் வடக்கு), முகமது அபுபக்கர் (கடையநல்லூர்), உதயசூரியன் (சங்கராபுரம்), கணேஷ் (உதகை மண்டலம்), கீதா (கிருஷ்ணராயபுரம்), சந்திரசேகர் (மணப்பாறை), நடராஜ் (மயிலாப்பூர்), பரமசிவம் (வேடசந்தூர்), பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்திய பகுதி), பாஸ்கர் (நாமக்கல்), பாரதி (சீர்காழி), மருதமுத்து (கெங்கவள்ளி), மோகன் (செய்யாறு), ராஜா (மன்னார்குடி) ஆகியோர் அடங்கிய குழுவினர் வருகிற 19-ந்தேதி (புதன்கிழமை), 20-ந்தேதி (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நெல்லை மாவட்டத்துக்கு வருகை தர உள்ளனர்.
பொது கணக்கு குழு உறுப்பினர்கள் 19-ந்தேதி மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொள்கிறார்கள். 20-ந்தேதி அனைத்து துறை அலுவலர்களுடன் துறைவாரியாக ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை பொறுப்பாகவும், சிறப்பாகவும் செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.
கூட்டத்தில், நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மணீஸ் நாரணவரே, நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story