ஆலங்குளம் அருகே பல்பொருள் அங்காடியில் ரூ.8 லட்சம் கொள்ளையடித்த 3 வாலிபர்கள் கைது


ஆலங்குளம் அருகே பல்பொருள் அங்காடியில் ரூ.8 லட்சம் கொள்ளையடித்த 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 15 Dec 2018 10:00 PM GMT (Updated: 15 Dec 2018 6:14 PM GMT)

ஆலங்குளம் அருகே பல்பொருள் அங்காடியில் ரூ.8 லட்சம் கொள்ளை போனது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குளம்,

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகன் விஜய் (வயது 26). இவர் அப்பகுதியில் பல்பொருள் அங்காடி (சூப்பர் மார்க்கெட்) நடத்தி வருகிறார். கடந்த மாதம் 4-ந் தேதி இரவு விஜய் அங்குள்ள லாக்கரில் பணத்தை வைத்து பூட்டிவிட்டு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது, லாக்கர் உடைந்து கிடந்தது. அதில் வைத்திருந்த ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து ஊத்துமலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே ரெட்டியார்பட்டி கீழத்தெருவை சேர்ந்த காந்தி மகன் லட்சுமணன் என்ற தினேஷ் (22) என்பவர், புதிய கார், மோட்டார் சைக்கிள், நகை என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இது அப்பகுதி மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இதுகுறித்து ஊத்துமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார், லட்சுமணனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விஜயின் பல்பொருள் அங்காடியில் லட்சுமணன் திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து லட்சுமணன், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாவது:-

நான் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தேன். அப்போது பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்து வரும் எனது நண்பர்கள் முருகன் (26), காந்திநகரை சேர்ந்த உதயகுமார் (25) ஆகியோர் என்னிடம் வந்து நாங்கள் வேலை பார்க்கும் கடையில் நீ வந்து கொள்ளையடித்தால் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்று கூறினர். இதனால் எனக்கு சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு, கடந்த மாதம் 4-ந் தேதி இரவு பல்பொருள் அங்காடி அடைக்கும் நேரத்தில் நான் பொருட்கள் வாங்க செல்வதுபோல் சென்று உள்ளே ஒரு பகுதியில் ஒளிந்து கொண்டேன். பின்னர் அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் சென்ற பின்னர் பணம் இருக்கும் அறைக்கு சென்று அங்கு இருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்தை கொள்ளையடித்தேன். பின்னர் மறுநாள் கடையை திறந்த பின்னர் வாடிக்கையாளர் போல் வெளியே சென்றுவிட்டேன். பின்னர் அந்த பணத்தை வைத்து கார், மோட்டார் சைக்கிள் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்தேன். போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, லட்சுமணன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் லட்சுமணனிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள் மற்றும் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story