“நான்கு வழிச்சாலை திட்டத்தில் ஊழல் நடந்ததாக கூறுவது வேடிக்கையானது” பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


“நான்கு வழிச்சாலை திட்டத்தில் ஊழல் நடந்ததாக கூறுவது வேடிக்கையானது” பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 15 Dec 2018 11:15 PM GMT (Updated: 15 Dec 2018 6:38 PM GMT)

நான்கு வழிச்சாலை திட்டத்தில் ஊழல் நடந்ததாக கூறுவது வேடிக்கையானது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் இல்லத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

5 மாநில தேர்தல் முடிவால் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்துக்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விலை மாறுதலுக்கு மத்திய அரசு பொறுப்பல்ல. கச்சா எண்ணை விலை ஏற்றத்தாழ்விற்கு ஏற்ப பெட்ரோல் விலை மாறி வருகிறது.


கஜா புயல் விவகாரத்தில் லட்சக்கணக்கானோர் பலியானால் தான் பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறார். செத்த வீட்டில் அரசியல் நடத்துவதை விட மானங்கெட்ட பிழைப்பு வேறெதுவும் கிடையாது. 4 வழி சாலை திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறுவது வேடிக்கையானது. எந்த திட்டத்தில் என்னென்ன ஊழல் நடந்திருக்கிறது என்பதை அவர்கள் முதலில் கூறட்டும்.

குமரி மாவட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஒரு திட்டத்தின் மொத்த மதிப்பீடு எவ்வளவு என தெரியாமல் அவர் கூறி இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். இதுதொடர்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். உயிரே போனாலும் 2 ஆயிரம் கோடி ரூபாய் அல்ல, ஒரு பைசா கொடுத்தாலும் நான் வாங்கமாட்டேன்.


சென்னையை மையமாக கொண்டு இத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வந்தவர்கள் தற்போது குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இங்கு சாதி, மத ரீதியாக பிரச்சினையை தூண்டிவிட திட்டமிடுகிறார்கள். தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு எந்த கட்சியோடும் பிரச்சினை இல்லை. ஐ.ஐ.டி. உணவு விடுதியில் பிரிவினை ஏற்படுத்தியது தவறான செயல்.

அ.தி.மு.க. மூழ்கும் கப்பல் என தி.மு.க.வில் சேர்ந்த பிறகு செந்தில்பாலாஜி கூறியுள்ளார். அந்த கப்பலில் தான் சிறிது காலம் அவர் துணை கேப்டனாக இருந்தார். இலங்கையில் அமைதி நிலவினால் அங்குள்ள தமிழர்களுக்கும், நம் நாட்டின் வெளி உறவிற்கும் நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story