தவறான தகவலை தெரிவித்ததாக கூறி மின்வாரிய அலுவலர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


தவறான தகவலை தெரிவித்ததாக கூறி மின்வாரிய அலுவலர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Dec 2018 4:30 AM IST (Updated: 16 Dec 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

தவறான தகவலை தெரிவித்ததாக கூறி மின்வாரிய அலுவலர்களை கண்டித்து புளிச்சங்காடு கைகாட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி கஜா புயல் தாக்கியது. இதில் ஆலங்குடி தொகுதியில் உள்ள கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட அனைத்து கிராமங்களும், அறந்தாங்கி, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை உள்ளிட்ட அனைத்து தாலுகாவிலும் உள்ள வீடுகள், மரங்கள், பயிர்கள், மின் கம்பங்கள் போன்றவை சேதமடைந்தன.

புயல் தாக்கி 30 நாட்களுக்கு மேலாகியும், பல கிராமங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டதாக தவறான தகவல்களை தெரிவித்த மின்வாரிய அலுவலர்களை கண்டித்தும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி பணிபுரிந்த மின் பணியாளர்கள் அனைவரையும் அவர்கள் ஊருக்கு அனுப்பி வைத்ததை கண்டித்தும் புளிச்சங்காடு கைகாட்டியில் நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, மெய்யநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், நெடுவாசல் மீட்பு குழுவினர், அணவயல், மாங்காடு, வடகாடு, சேந்தன்குடி, கீரமங்கலம், புள்ளான்விடுதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். மறியலில் கலந்து கொண்ட பெண்கள், எங்களுக்கு மின்சாரம் கொடு, சேதமடைந்த வீடுகள், மரங்கள், கால்நடைகளுக்கு நிவாரணம் கொடு, விவசாய கடன், கல்விக்கடன், சுயஉதவிக்குழு கடன்களையும், விவசாய ஆழ்குழாய் கிணறுகளில் மீட்டர் கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி மடிபிச்சை ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

சாலை மறியல் தொடங்குவதற்கு முன்பே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மின்வாரிய அதிகாரிகள் வந்து எங்கள் கோரிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தியாகராஜமூர்த்தி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், ஆலங்குடி மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன், தாசில்தார் ரத்தினாவதி உள்ளிட்ட அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது 18 முதல் 20-ந் தேதிக்குள் 1000 மின் பணியாளர்களை அழைத்து வரவும், 3 ஆயிரம் மின்கம்பங்களை கொண்டு வந்து தேங்கி உள்ள அனைத்து மின்பணிகளையும் சீரமைத்து வீடுகள், விவசாய பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால், புதுக்கோட்டை, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து சாலை மறியலில் ஈடுபட்ட மெய்யநாதன் எம்.எல்.ஏ. கூறுகையில், ஆலங்குடி தொகுதி முழுமையாக விவசாயம் மற்றும் தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆழ்குழாய் பாசனத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி வருகிறது. ஆனால் 60 சதவீதம் கூட மின் இணைப்புகள் கொடுக்காமல் முழுமையாக மின் இணைப்புகள் கொடுத்துவிட்டதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். மேலும் வராத மின்சாரத்திற்கு மின்கட்டணம் கட்ட சொல்லி ரசீது அனுப்பி உள்ளனர். அவற்றை நிறுத்தி வைப்பதுடன் 3 மாதங்களுக்கு மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த நிலை மாறி அனைவருக்கும் முழுமையான மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அதற்கு மின்வாரிய அதிகாரிகள் வந்து உத்தரவாதம் அளித்து உள்ளனர். வருகிற 20-ந் தேதிக்குள் 1000 மின் பணியாளர்களும், 3 ஆயிரம் மின்கம்பங்களும் வரவில்லை என்றால் 21-ந் தேதி விவசாயிகளை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Next Story