வெள்ளனூர் அருகே நிவாரணம் கேட்டு கிராம நிர்வாக அதிகாரியை பொதுமக்கள் முற்றுகை


வெள்ளனூர் அருகே நிவாரணம் கேட்டு கிராம நிர்வாக அதிகாரியை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 16 Dec 2018 4:15 AM IST (Updated: 16 Dec 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளனூர் அருகே கஜாபுயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி கிராம நிர்வாக அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி கஜா புயல் தாக்கியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மின் தடை ஏற்பட்டது.

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சில குக்கிராமங்களை தவிர பிற கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து வருவாய்துறையினர் மூலம் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை படங்கள் எடுத்து அவர்களது வங்கி கணக்கு எண், ஆதார் எண் போன்றவற்றை சேகரித்து, அவர்களது வங்கி கணக்கில் நிவாரண தொகையை வரவு வைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதேபோல பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் 27 வகையான நிவாரண பொருட்களும் வழங் கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அன்னவாசல் ஒன்றியம் வெள்ள னூர் அருகே பூங்குடி கிராம பொதுமக்களுக்கு நேற்று முன்தினம் மற்றும் நேற்று தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நிவாரண பொருட்களை பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது. இந்த டோக்கன் வழங்கும் பணியில் கிராம நிர்வாக அதிகாரி பிரபு ஈடுபட்டார். இந்நிலையில் அவரை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு, பாகுபாடின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் டோக்கன் வழங்கவேண்டும் எனக்கூறி, நிவாரண பொருட்கள் வைக் கப்பட்டு இருந்த அறையை பூட்டு போட்டு பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் லட்சுமணதாஸ் காந்தி மற்றும் வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story