பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 5 பேர் பலியான சம்பவம்: 4-வது நடைமேடையை மாற்றி அமைக்கும் பணி முடிந்தது


பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 5 பேர் பலியான சம்பவம்: 4-வது நடைமேடையை மாற்றி அமைக்கும் பணி முடிந்தது
x
தினத்தந்தி 15 Dec 2018 10:40 PM GMT (Updated: 15 Dec 2018 10:40 PM GMT)

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 5 பேர் பலியான 4-வது நடைமேடையை மாற்றி அமைக்கும் பணி நிறைவடைந்தது. அந்த நடைமேடையை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார்.

ஆலந்தூர்,

சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூருக்கு கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி பயணிகள் விரைவு மின்சார ரெயில் சென்றது. பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் ரெயில் சென்றபோது, ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்தவர்கள் பக்கவாட்டில் உள்ள சுவரில் மோதி கீழே விழுந்தனர்.

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். முன்னதாக ஜூலை 23-ந் தேதியும் இதேபோல் தடுப்பு சுவரில் மோதி 2 பேர் பலியானார்கள். இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில் பார்வையிட்டு, பொதுமக்களிடம் கருத்து கேட்டனர்.

அப்போது பொதுமக்கள், 4-வது நடைமேடை வழியாக விரைவு மின்சார ரெயில்கள் செல்வதை தடை செய்ய வேண்டும். பக்கவாட்டில் உள்ள தடுப்பு சுவரை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் தடுப்பு சுவரை அகற்ற முடியாது என்று கூறிய அதிகாரிகள், அதற்கு பதிலாக 4-வது நடைமேடையை மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்தனர்.

அதன்படி 4-வது நடைமேடையும், தண்டவாளமும் 2 அடி நகர்த்தி மாற்றி அமைக்கப்பட்டது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்து விட்டது. அதில் சோதனை ஓட்டமும் நடத்தி பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், பரங்கிமலை ரெயில் நிலையத்தில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ள 4-வது நடைமேடையை ஆய்வு செய்தார்.

அந்த நடைமேடை வழியாக மீண்டும் விரைவு மின்சார ரெயில்களை இயக்க அனுமதி வழங்கலாமா?, அதனால் மீண்டும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? என்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் மனோகரன் கூறும்போது, “விபத்து நடைபெற்ற 4-வது நடைமேடை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதை ஆய்வு செய்யப்பட்டது. இந்த நடைமேடையில் விரைவு மின்சார ரெயில்களை மீண்டும் இயக்குவது பற்றி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் மின்சார ரெயில்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும். நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் மின்சார ரெயில்களை இயக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது” என்றார்.

Next Story