கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தை கிராம உதவியாளர்கள் முற்றுகை
திருக்கோவிலூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீஸ் நிலையத்தை கிராம உதவியாளர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருக்கோவிலூர்,
தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக, பொதுமக்கள் பல்வேறு வகையான சான்றிதழ்கள் பெறுவதில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அரசு மாற்று நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம உதவியாளர்கள் துணையுடன் இந்த பணிகளை கவனித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திருக்கோவிலூர் அருகே உள்ள ஆதிச்சனூர் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரியும் தங்கவேல் (வயது 56) என்பவர், பணிநிமித்தமாக அரகண்டநல்லூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அங்கு வந்த வசந்தகிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுலர் ராமதாஸ், தங்கவேலுவிடம் சென்று, நாங்கள் போராட்டத்தில் இருக்கும்போது நீ எங்கள் வேலையை பார்க்கிறாயா? என்று கேட்டு, அவரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தங்கவேலு அரகண்டநல்லூர் போலீசில் புகார் செய்தார். ஆனால் அவரது புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கண்டாச்சிபுரம் வட்டத்தை சேர்ந்த கிராம உதவியாளர்கள் சுமார் 20 பெண்கள் உள்பட 70 பேர் அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அப்போது, தங்கவேலு கொடுத்த புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். உடன் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையேற்று அங்கிருந்து கலைந்து சென்ற கிராம உதவியாளர்கள் கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், தாசில்தார் புஷ்பவதியை நேரில் சந்தித்து கிராம உதவியாளரை தாக்கிய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்தடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவோம் என்று தெரிவித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் புஷ்பவதி, இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையேற்று அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.