மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது தொண்டர்களின் பொறுப்பு - பிரதமர் மோடி பேச்சு


மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது தொண்டர்களின் பொறுப்பு - பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 15 Dec 2018 11:30 PM GMT (Updated: 15 Dec 2018 11:30 PM GMT)

‘மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது தொண்டர்களின் பொறுப்பு’ என்று கோவையில் நடந்த காணொலி காட்சி கலந்துரையாடலில் பிரதமர் மோடி கூறினார்.

கோவை,

கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில், கோவை பாராளுமன்ற தொகுதி குறித்தும், பாராளுமன்ற தேர்தலின் போது எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் “என் வாக்கு சாவடி.. வலுவான வாக்கு சாவடி... என்கிற தலைப்பில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கயிறு வாரியத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாவட்ட தலைவர் நந்தகுமார், செயற்குழு உறுப்பினர் சபரிகிரிஷ் உள்ளிட்ட கோவை மாவட்ட பா.ஜனதா கட்சியினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதற்காக பெரிய திரை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காணொலி காட்சியின் போது பிரதமர் மோடி அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறி தனது பேச்சை ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசியதாவது:–

தமிழ் மொழி பழமையான மொழி. தமிழகத்தில் உள்ள கிராமபுறங்களில் பிரதான் மந்திரி யோஜன திட்டம், முத்ரா கடன் வழங்கல் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2010–ம் ஆண்டு 86 ரூபாயாக இருந்த பாசிபருப்பின் விலை 2018–ம் ஆண்டு ரூ.90 முதல் ரூ.100 வரை உயருவதாக இருந்தது. ஆனால் அது தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ரூ.70 முதல் ரூ.80–க்குள் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்த கல்வி கடன், வீட்டு கடன்களின் வட்டி விகிதம் தற்போது வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளது. எல்லா துறைகளிலும் பா.ஜனதா மிகப்பெரிய வளர்ச்சியடைந்து உள்ளது. விவசாயிகளின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் அரசு ரூ.1.29 லட்சம் கோடி தான் ஒதுக்கியது. ஆனால் பா.ஜனதா ஆட்சியில் ரூ.2.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பின் மீது அதிக கவனம் செலுத்தி அதற்கான திட்டங்களை வகுத்து, செயல்படுத்தி வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகள் மற்றும் தீவிரவாதிகளிடமிருந்து எந்தவித அச்சுறுத்தல்களும் நமக்கு இல்லை. மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தொண்டர்கள் பொறுப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அரங்கில் உட்கார்ந்திருந்த கோவை மாவட்ட தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் கவிதா எழுந்து, ‘மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களிடம் சென்று சேரவில்லை. அதை எப்படி கொண்டு செல்வது’ என்று கேட்டார்.

அதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்கையில், ‘தமிழிலேயே ‘நமோ’ என்ற செல்போன் செயலி உள்ளது. அதை மக்களுக்கு சேரும் வகையில் தொண்டர்கள் செயல்பட வேண்டும். மேலும் மத்திய அரசு திட்டங்களினால் பயன் அடைந்தவர்கள் யார் என்று கண்டறிந்து அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பயனை எடுத்து சொல்ல வைத்தால் மக்கள் நமக்கு ஆதரவு அளிப்பார்கள்’ என்றார்.

இதேபோல் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

விவசாயிகளுக்கு பா.ஜனதா அரசு நண்பனாக இருந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. விவசாய பயிர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டு, இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. விவசாயிகள் வங்கிகள் கடன் பெறும் வகையில் கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. சுவாமிநாதன் கமி‌ஷன் பரிந்துரையின் பேரில் விவசாயிகள் பயனடையும் பொருட்டு அவர்கள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதபோது ஆதார விலை வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 2020 மற்றும் 2022–ம் ஆண்டுகளில் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story