கோத்தகிரி அருகே நிலத்தகராறில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு வாலிபர் கைது
கோத்தகிரி அருகே நிலத்தகராறில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள கடைக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நிவாஸ்(வயது 36). தொழிலாளி. இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பீரன் என்ற மாதனுக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் நிலப்பிரச்சினையை தீர்க்க ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மாதன் மற்றும் அவரது மனைவி சரசு, மகள் சுருதி, மருமகன் லோகேஷ்(30) ஆகியோர் நிவாசின் வீட்டிற்கு சென்று நிலப்பிரச்சினை தொடர்பாக அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதற்கிடையில் சுருதி தனது கைக்குழந்தையை நிவாசின் வீட்டிற்குள் வைத்துவிட்டு, ‘இது எங்களுக்கு சொந்தமான இடம்‘ என்று கூறி அவரிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.
அப்போது மாதன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென நிவாசை தலையில் வெட்டினார். இதை தடுக்க வந்த நிவாசின் தாயார் சினிக்கி கையிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. உடனடியாக நிவாஸ் மற்றும் அவரது தாயார் சினிக்கி ஆகியோர் மீட்கப்பட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு நிவாஸ் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் மாதன், சரசு, சுருதி, லோகேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் லோகேஷை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மாதன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.