சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பார்கள் : பரமேஸ்வர் எச்சரிக்கை


சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பார்கள் : பரமேஸ்வர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 Dec 2018 11:39 PM GMT (Updated: 15 Dec 2018 11:39 PM GMT)

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பார்கள் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் எச்சரித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த புதிய கட்டிடத்தை நேற்று காலையில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் திறந்து வைத்தார். இதில், மத்திய மந்திரி சதானந்தகவுடா, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில்குமார், கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் சீமந்த்குமார் சிங், அலோக்குமார், ஹரிசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக போலீஸ் துறை மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக விளங்குகிறது. எந்த ஒரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடக்கிறதோ?, அந்த பகுதியில் போலீஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. டி.ஜே.ஹள்ளி பகுதியில் 300 முதல் 400 வரையிலான குற்ற சம்பவங்கள் நடக்கிறது. அதற்காக தான் டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறுவது அதிகரித்து வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறுவதை தடுக்க நகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

நான் சமீபத்தில் பிரான்சு நாட்டுக்கு சென்றேன். அந்த நாட்டிலும் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அதனை அந்த நாட்டு அரசு எளிதாக கையாளுகிறது. போலீஸ் துறையில் ஒழுக்கம் குறைந்துள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் ஒழுக்கத்தை கடைபிடித்தால் தான், அவர்களுக்கு கீழ் பணியாற்றும் மற்ற போலீஸ்காரர்கள் ஒழுக்கத்தை கடைபிடிப்பார்கள். போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு ஒழுக்கத்தை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பெங்களூரு நகரில் நிலஅபகரிப்பு சம்பவங்கள் நடைபெறுவது சமீபமாக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக தினம், தினம் புகார்கள் வருகின்றன. அரசு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவது, தனியார் நிறுவனங்களை மிரட்டி நிலங்களை அபகரிப்பது போன்ற சம்பவங்களில் சில கும்பலினர் ஈடுபடுகின்றனர். அந்த கும்பலினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். போலீஸ் துறைக்கு புதிதாக 35 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதுபோல, 2 ஆயிரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் போலீஸ் துறையில் காலியாக இருந்த பெரும்பாலான இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள காலி இடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் குற்றங்கள் நடைபெறுவது குறைந்துள்ளது. குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள், சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். மாநிலத்தில் குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள், பொதுமக்களின் அமைதியை கெடுக்கும் விதமாக சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்து வருகிறார்கள். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு போலீசாருக்கு உள்ளது. அதனால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை துப்பாக்கியால் சுட்டு பிடிப்பதை தடுக்க விரும்பவில்லை. ரவுடிகள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் கால்களில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பார்கள். போலீசார் தங்களது கடமையை சுதந்திரமாக செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.


Next Story