மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது


மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2018 5:51 AM IST (Updated: 16 Dec 2018 5:51 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே முத்திரையர்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இனியன், குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது முத்திரையர் பாளையம் கல்கி கோவில் அருகே ஜீவா தெருவில் உள்ள புளியந்தோப்பில் கஞ்சா பொட்டலம் போட்டுக் கொண்டு இருந்த 2 வாலிபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

இதன்பின் அவர்கள் 2 பேரையும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் முத்திரையர்பாளையம் காந்திதிருநல்லூர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 26), திருவண்ணாமலை சமுத்திரகாலனி தர்மன் (21) என்பது தெரியவந்தது. திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை செய்து வந்த தர்மனிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து புதுவையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு அய்யப்பன் விற்பனை செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பன், தர்மன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள 1¾ கிலோ கஞ்சா, 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Next Story