பாம்பன்,மண்டபம் பகுதியில் கடல் கொந்தளிப்பு மீனவர்கள் மீன் பிடிக்க தடை
புயல் சின்னத்தை தொடர்ந்து பாம்பன்,மண்டபம் பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்,
வங்க கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து ராமேசுவரம் பகுதியில் உள்ள மீனவர்கள் 4–வது நாளாக மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப் பட்டுள்து. ராமேசுவரம்,தனுஷ்கோடி பகுதியில் 850–க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும்,300–க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன் பிடிக்க செல்லவில்லை.
இதேபோல் பாம்பன் பகுதியிலும் 100–க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் 400–க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன் பிடிக்க செல்லவில்லை.இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக ராமேசுவரம், பாம்பன் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பாம்பன் பகுதியில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக சீறி எழுந்தன.
பாம்பன் துறுமுக அலுவலகத்தில் நேற்று 3–வது நாளாக 1–வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது. இதே போல் மண்டபம் பகுதியிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.பல அடி உயரத்திற்கு கடல் அலைகள் சீறி எழுந்தன. மண்டபத்தி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் 500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் வடக்கு மற்றும் தெற்கு துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.