மண்டபத்தில் 70 கிலோ கடல் அட்டைகளுடன் வாலிபர் கைது


மண்டபத்தில் 70 கிலோ கடல் அட்டைகளுடன் வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2018 12:51 AM GMT (Updated: 16 Dec 2018 12:51 AM GMT)

மண்டபத்தில் 70 கிலோ கடல் அட்டைகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார்வளைகுடா கடல் பகுதியில் கறுப்பு அட்டை,ராஜாஅட்டை,வெள்ளை அட்டை என பல வகையான கடல் அட்டைகள் உள்ளன. கடல் வெள்ளரி என்று அழைக்கப்படும் இந்த கடல் அட்டைகளை பிடிக்க அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.அரசு தடை விதித்துள்ள போதிலும் ஒரு சிலர் தொடர்ந்து கடல் அட்டைகளை பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் மண்டபம் தெற்கு கடல் பகுதியில் கடல் அட்டைகள் பிடித்து வருவதாக கடலோர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதை தொடர்ந்து மண்டபம் கடலோர காவல் நிலைய சப்–இன்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையில் கடலோர போலீசார் தெற்கு கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்றனர்.கடலோர போலீசாரை கண்டதும் பிளாஸ்டிக் கேன்களை கடற்கரையில் வைத்து விட்டு தப்பி ஓட முயன்ற மண்டபம் அம்பலக்காரத் தெருவை சேர்ந்த சகுபர்சாதிக் (வயது 31) என்பவரை பிடித்து கைது செய்து 2 கேன்களில் இருந்த சுமார் 70 கிலோ கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்து கடலோர காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

பறிமுதல்செய்யப்பட்ட கடல் அட்டைகளையும் கைது செய்யப்பட்ட நபரையும் மண்டபத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் கடலோர போலீசார் ஒப்படைத்தனர்.இது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலோர போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்ட பின்பு ஏஜெண்டுகள் மூலமாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story