தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்க ஆயுள் தண்டனை கைதிக்கு பரோல்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக ஆயுள் தண்டனை கைதியை பரோலில் விடுதலை செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை ஆண்டார்கொட்டாரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் மணி என்ற மணிமாறன் (வயது 35). சிலைமான் போலீஸ் சரகத்தில் கடந்த 2005–ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் மணியை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் மணிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் மணியின் தாயார் வீரலட்சுமி உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக மணியை 15 நாள் பரோலில் விடுதலை செய்யக்கோரி அவரது சார்பில் சகோதரர் மதுரை ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்தார். அதில், மணி கடந்த 8 ஆண்டாக சிறையில் உள்ளார். தந்தை இறந்த போது அவரை பரோலில் விடுதலை செய்ய சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. தாயார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சையில் இருந்தபோதும் அவருக்கு பரோல் விடுமுறை மறுக்கப்பட்டது. இந்தநிலையில் எங்கள் தாயார் இறந்துவிட்டார். இதனால் தாயாரின் இறுதி சடங்கில பங்கேற்க அவருக்கு 15 நாள் பரோல் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் வெங்கடேசன் வாதிட்டார். பின்னர் தாயாரின் இறுதி சடங்களில் பங்கேற்க மணிக்கு 15.12.2018 மாலை 5 மணி முதல் 17.12.2018 மாலை 5 மணி வரை பரோல் விடுமுறை வழங்கப்படுகிறது என்றும், அவரை போலீசார் சிவில் உடையில் அழைத்து செல்ல வேண்டும், பாதுகாப்புக்கான செலவை சிறை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.