அரசு மருத்துவக்கல்லூரியில் ரூ.37¼ கோடியில் புதிய கட்டிடங்கள்; அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் பூமிபூஜை
மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய கட்டிடங்களுக்கான பூமி பூஜையை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
மதுரை,
மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடங்கள் 150 ஆக உள்ளது. இதனை 250 ஆக உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எம்.பி.பி.எஸ். இடங்களை உயர்த்துவதற்கு மருத்துவக்கல்லூரியில் பல்வேறு வசதிகள் இல்லை என கூறி இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி தராமல் இருக்கிறது.
இந்தநிலையில் கடந்த முறை ஆய்வுக்கு வந்த இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர்கள், வசதிகள் மேம்படுத்தியதும், இட உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும், மருத்துவ கவுன்சில் உறுப்பினர்கள், மருத்துவக்கல்லூரியில் என்ன மாதிரியான வசதிகள், கட்டிடங்கள் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர். அதன்படி கூடுதல் கட்டிடங்களுக்கான பூமி பூஜை நடந்தது. இதில் அனைத்து துறைகளுக்கான கட்டிங்கள் கட்டப்படுகிறது. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி பரிசோதனை கூடங்கள், பேராசிரியர், இணை பேராசிரியர்களுக்கு அறைகள், பணியாளர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிங்கள் ரூ.37 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்படுகின்றன.
புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக பூமி பூஜை மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் நடராஜன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மருத்துவக்கல்லூரி முதல்வர் சண்முகசுந்தரம், முன்னாள் முதல்வர் மருதுபாண்டியன், மருத்துவ கண்காணிப்பாளர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து முதல்வர் சண்முக சுந்தரம் கூறும்போது, புதிதாக கட்டப்படும் கட்டிடம் 6 தளங்கள் கொண்டது. இதில் தரை தளத்தில் உணவகம், வாகனம் நிறுத்துமிடமும், முதல் தளத்தில் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்களுக்கான அறைகளும், 2–ம் தளத்தில் தடயவியல் துறையும், 3–ம் தளத்தில் உடலியல் துறையும், 4–ம் தளத்தில் உயிர்வேதியியல் துறையும், 5–ம் தளத்தில் மருந்தியல் துறையும், 6–ம் தளத்தில் பரிசோதனை கூடமும் அமைய இருக்கிறது. இதுபோன்ற வசதிகள் மூலம் மதுரை மருத்துவக்கல்லூரிக்கு கூடுதல் இடங்கள் வழங்கப்படும் என்றார்.