சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இளைஞர்-மகளிருக்கு தொழிற்திறன் பயிற்சி கலெக்டர் ரோகிணி தகவல்


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இளைஞர்-மகளிருக்கு தொழிற்திறன் பயிற்சி கலெக்டர் ரோகிணி தகவல்
x
தினத்தந்தி 17 Dec 2018 4:00 AM IST (Updated: 16 Dec 2018 11:20 PM IST)
t-max-icont-min-icon

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இளைஞர், மகளிருக்கு தொழிற்திறன் பயிற்சி நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

சேலம், 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2018-2019-ம் ஆண்டிற்காக, இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் தொழிற்திறன் பயிற்சி மேளா நடைபெற உள்ளது. 3 மாதம் முதல் 6 மாத காலம் வரையிலான இப்பயிற்சியினை தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட உள்ளது. பயிற்சி முடித்த அனைவருக்கும் நிறுவனங்களால் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரப்படும்.

நர்சிங் பயிற்சிகள், வணிகம் தொடர்பான பயிற்சிகள், தையல் பயிற்சி, கண்காணிப்பு கேமரா பொருத்துதல் பயிற்சி, கணினி தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி, சில்லரை விற்பனை மேலாண்மை, எலக்ட்ரீசியன் பயிற்சி, டேலி பயிற்சி, அனிமேஷன் மற்றும் மல்டிமீடியா உதவியாளர், வெப் டிசைனிங், பேஷன் டெக்னாலஜி, அழகு கலை பயிற்சி, செக்யூரிட்டி பயிற்சிகள், நூல் இழை கட்டுதல் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி முதல் பட்டப்படிப்பு வரை படிப்பு கல்வி தகுதி ஆகும். 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அந்தந்த பிரிவில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் திட்ட நெறிமுறைகளின்படி ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய ஒதுக்கீடு வழங்கப்படும்.

பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் காலை 9 மணிக்கு சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் தொழிற்திறன் பயிற்சி மேளாவில் பங்கேற்று பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story