கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டம் போலீசார் அழைத்து சென்ற வாலிபர்களை விடுவிக்க வலியுறுத்தல்


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டம் போலீசார் அழைத்து சென்ற வாலிபர்களை விடுவிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Dec 2018 3:45 AM IST (Updated: 17 Dec 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர்களை விடுவிக்க வலியுறுத்தி நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி வள்ளுவர்நகரை சேர்ந்தவர் அலங்காரம் (வயது 57). பூவியாபாரி. இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி செண்பகபேரி கிராமத்தில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 5 மாதங்களாகியும் கொலை வழக்கில் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நாலாட்டின்புத்தூர் போலீசார் சந்தேகத்தின் பேரில் செண்பகபேரி கிராமத்தை சேர்ந்த 7 வாலிபர்களை சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்காக பிடித்து சென்றனர். அதன் பிறகு அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கொலை வழக்கில் தொடர்பு இல்லாத நபர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்என கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால் எங்கள் ஸ்மார்ட் கார்டுகளை அரசிடம் ஒப்படைப்போம் என்றும் அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் போது, கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். கொலை சம்பவத்தில் தொடர்பு இல்லாதவர்கள் விடுவிக்கப்படுவார்கள். தொடர்பு உடையவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

அதன் பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story