கோவில்பட்டி அருகே 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய சிற்றரசன் சதிக்கல் கண்டுபிடிப்பு


கோவில்பட்டி அருகே 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய சிற்றரசன் சதிக்கல் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 17 Dec 2018 4:30 AM IST (Updated: 17 Dec 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய சிற்றரசன் சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தலில் போரில் மாண்ட சிற்றரசன் சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை தொல்லியல் ஆய்வாளரும், நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியருமான சங்கரநாராயணன் ஆராய்ந்து கண்டுபிடித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

பொதுவாக இதுவரை கண்டறியப்பட்டு உள்ள நடுக்கற்களின் வகைகளுள் ஒன்றான சதிக்கற்கள் பெரும்பாலும் சாதாரண குடிகள் சேர்ந்தவையே. அரச மரபை சேர்ந்தவர்களுக்கு எடுக்கப்பட்ட சதிக்கற்கள் அரிதினும் அரிதானவையே. அந்த வகையில், இளையரசனேந்தலில் இறந்த சிற்றரசனுக்காகவும், அவனோடு உயிர்நீத்த மனைவிக்காகவும் எடுக்கப்பட்ட சதிக்கல் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த சதிக்கல் 1,100 ஆண்டுகளுக்கு முந்தையது ஆகும்.

இந்த சதிக்கல்லில் ஆண், பெண் உருவங்கள் நின்ற நிலையில் காட்டப்பட்டு உள்ளன. ஆணின் இடப்புறம் பெண் இருப்பது போல் காட்டப்பட்டு உள்ளது. ஆண் இடது கையில் கேடயத்தை மேல்நோக்கி பிடித்தவாறும், வலது கை நிலத்தை நோக்கி குத்திட்ட வாளுடனும் உள்ளது. பெண் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திய நிலையில் காட்டப்பட்டு உள்ளது. இரு கைகளிலும் ஏதோ பொருட்கள் ஏந்திய நிலையில் காட்டப்பட்டு உள்ளன. ஆணின் வலப்பக்கத்தில், மற்றொரு ஆண் உருவம் வலது கையில் வெண்கொற்ற குடையை விரித்து முடிசூட்டப்பட்டவரின் தலை மீது ஏந்தி நிற்பது போல் அமைந்துள்ளது.

ஏந்தல் என்றால் குளம் என்று பொருள். இளையரசன் என்பது சிற்றரசன் எனவும், இளவரசன் எனவும் பொருள்படும். இந்த அரசன் பெயரிலேயே குளம் வெட்டி ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம். இந்த சிற்றரசன் இறந்தபோது அவனது மனைவி உடன் கட்டை ஏறியதன் நினைவாக இந்த சதிக்கல் எடுக்கப்பட்டு உள்ளது.

9-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்றரசன் சதிக்கல்லுடன் அதே காலத்தை சேர்ந்த மூத்த தேவி சிற்பம், 11-ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிற்பம், காளி சிற்பமும் கண்டறியப்பட்டு உள்ளன. மேலும் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த 3 சதிக்கற்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story