நெல்லையில் பிப்ரவரி 24-ந் தேதி நடக்கிறது: நாடார் சமுதாய அரசியல் எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டத்தில் முடிவு


நெல்லையில் பிப்ரவரி 24-ந் தேதி நடக்கிறது: நாடார் சமுதாய அரசியல் எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 17 Dec 2018 4:15 AM IST (Updated: 17 Dec 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வருகிற பிப்ரவரி மாதம் 24-ந் தேதி நாடார் சமுதாய அரசியல் எழுச்சி மாநாடு நடத்துவது என அனைத்து சமுதாய நாடார் சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நெல்லை, 

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நாடார் சமுதாய அரசியல் எழுச்சி மாநாடு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் அனைத்து நாடார் சங்கங்கள் சார்பில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் சின்னமணி நாடார் தலைமை தாங்கினார்.

நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் முன்னிலை வகித்தார். செயலாளர் ஆர்.சண்முகவேல் வரவேற்று பேசினார். நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மறைவுக்கு பிறகு நமது சமுதாயத்தில் முடிவு எடுக்கக்கூடிய ஒரு தலைவர் இல்லை. நல்ல தலைவரை நாம் அடையாளம் காட்ட வேண்டும்.

நாடார் சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி உள்ளது. அரசியலிலும் அதிகளவு முக்கியத்துவம் இல்லை. நாடார் சமுதாய அரசியல் எழுச்சி மாநாட்டை தொடர்ந்து அரசியல் பிரதிநிதித்துவம் பெரும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையார், தட்சணமாற நாடார் சங்க பொருளாளர் செல்வராஜ், இயக்குனர் வி.எஸ்.கணேசன், நாடார் மக்கள் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், மும்பை நாடார் சங்க தலைவர் ராமராஜா நாடார், செயலாளர் காசிலிங்க நாடார், அகில இந்திய கராத்தே செல்வின் நாடார் நற்பணி மன்ற தலைவர் ராஜ் நாடார், சத்திரிய நாடார் சங்க தலைவர் சந்திரன் ஜெயபால், சிங்கப்பூர் நாடார் மகாஜன சங்க தலைவர் மகாகிப்சன், நெல்லை நாடார் உறவின் முறை தலைவர் எஸ்.எஸ்.எஸ்.நாதன், நாடார் சங்க நிர்வாகிகள் முத்துரமேஷ் நாடார், செல்வராஜ் நாடார், காமராஜ் நாடார், தங்கமுத்து நாடார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த நாடார் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் மாநாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும், அரசியலில் நாடார்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் குறைந்து விட்டது என்பது பற்றியும் பேசினர்.

இதில் மதுரை நாடார் மகாஜன சங்கம், தட்சணமாற நாடார் சங்கம், சென்னை வாழ் நாடார் சங்கம், நெல்லை-தூத்துக்குடி மகமை பரிபாலன சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின் நாடார் மக்கள் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த கூட்டத்தில் அனைத்து சங்கங்களையும் சேர்ந்த நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. நாடார் சமுதாய அரசியல் எழுச்சி மாநாடு வருகிற பிப்ரவரி 24-ந் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த மாநாட்டை நெல்லையில் பிரமாண்டமாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்து இருக்கிறோம்.

மாநாட்டில் அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொள்வார் கள். நாடார் களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது பற்றி விவாதிப்போம். இந்த மாநாடு நாடார் சமுதாயத்துக்கு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும். அதன்பிறகு நாடார் சங்கங்களின் நிர்வாகிகள் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story