ராபி பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வேளாண்மை அதிகாரி தகவல்
நெல்லை மாவட்டத்தில் ராபி பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் செந்தில்வேல்முருகன் கூறினார்.
நெல்லை,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். ராபி பயிர்களான நெல்-3 (கோடை நெல்) பிரீமியத்தொகையாக ஏக்கருக்கு ரூ.388 காப்பீடு செய்ய வேண்டும். இதற்கு கடைசி நாள் வருகிற 15.2.2019 ஆகும். ராபி பருவ இதர பயிர்களுக்கு சோளம் ஏக்கருக்கு ரூ.146-ம், மக்காச்சோளம் ரூ.224-ம், கம்பு ரூ.125-ம், உளுந்து ரூ.215-ம், பாசிப்பயறு ரூ.215-ம், துவரை ரூ.215-ம், நிலக்கடலை ரூ.271-ம் காப்பீடு செய்யவேண்டும். இதற்கு கடைசி நாள் வருகிற 15.1.2019 ஆகும். பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.435 காப்பீடு செய்ய வேண்டும். இதற்கு கடைசிநாள் 28.2.2019 ஆகும். கரும்பு பயிருக்கு ரூ.2,025 காப்பீடு செய்ய வேண்டும். இதற் கான கடைசிநாள் 31.10.2019 ஆகும்.
இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் வங்கிகளிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ கட்டாயமாக பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறாத விவசாயிகள், நெல்லை மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ தங்களது விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் பயிர் காப்பீடு பதிவு செய்வதற்கு முன்பதிவு விண்ணப்பத்துடன், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று, வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையோ, காப்பீடு செய்வதற்கான பதிவு படிவத்தையோ பெற்றுக்கொள்ளலாம்.
எனவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், தங்களின் பதிவு விண்ணப்பங்கள் விடுபடாமல் பதிவேற்றம் செய்யவும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிர் காப்பீடு தொடர்பான மேலும் விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story