தர்மபுரி, ஒட்டப்பட்டி உழவர் சந்தைகளில் ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்திற்கு காய்கறிகள் விற்பனை


தர்மபுரி, ஒட்டப்பட்டி உழவர் சந்தைகளில் ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்திற்கு காய்கறிகள் விற்பனை
x
தினத்தந்தி 16 Dec 2018 10:30 PM GMT (Updated: 16 Dec 2018 7:53 PM GMT)

மார்கழி மாதம் முதல்நாளான நேற்று தர்மபுரி, ஒட்டப்பட்டி உழவர் சந்தைகளில் அதிகாலை முதலே விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. மொத்தம் ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்திற்கு காய்கறிகள் விற்பனை ஆனது.

தர்மபுரி,

இறை வழிபாட்டிற்கு உகந்த மாதங்களில் ஒன்றான மார்கழி மாதம் நேற்று தொடங்கியது. இந்த மாதத்தில் பக்தர்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி இறைவனை வழிபட்டு சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். மார்கழி மாதம் முதல் நாளில் கோவில்கள், வீடுகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவதும் வழக்கம். மார்கழிமாத பிறப்பு நாளான நேற்று அதிகாலை முதலே தர்மபுரி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த சந்தைக்கு நேற்று 124 விவசாயிகள் மொத்தம் 39 டன் காய்கறிகளை கொண்டு வந்தனர். அதிகாலை முதல் பகல் 11 மணி வரை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் தர்மபுரி உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க குவிந்தனர். வாழை இலை, வாழைக்காய், வாழைபழம், கொத்தவரங்காய், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பீட்ரூட், முட்டைக்கோஸ், தக்காளி ஆகியவற்றின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதேபோல் நாட்டு காய்கறிகளான கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், முள்ளங்கி, சுரைக்காய் ஆகியவற்றின் விற்பனையும் அதிக அளவில் நடைபெற்றது. உழவர் சந்தையில் உள்ள பல கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வங்கி சென்றனர்.

தர்மபுரிஉழவர் சந்தைக்கு நேற்று 39 டன் காய்கறிகள் கொண்டு வரப்பட்டன. இந்த காய்கறிகளை அங்கு குவிந்த 7500 வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றனர். தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒருநாளில் மட்டும் ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்திற்கு காய்கறிகள் விற்பனை நடைபெற்றது.

இதேபோல் தர்மபுரி ஒட்டப்பட்டி பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் வழக்கமான நாட்களில் 10 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். நேற்று 14 டன் காய்கறிகளை விவசாயிகள் கொண்டுவந்தனர். இந்த உழவர் சந்தையில் நேற்று 3600 பேர் ரூ.3 லட்சம் மதிப்பிலான காய்கறிகளை வாங்கி சென்றனர். தர்மபுரி, ஒட்டப்பட்டி ஆகிய 2 உழவர் சந்தைகளிலும் சேர்த்து நேற்று ஒருநாளில் ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்திற்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story