ஜனவரி 7–ந் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஜாக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பாளர் பேட்டி


ஜனவரி 7–ந் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஜாக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பாளர் பேட்டி
x
தினத்தந்தி 17 Dec 2018 4:15 AM IST (Updated: 17 Dec 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

ஜனவரி 7–ந்தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பாளர் தர்மபுரியில் கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தர்மபுரி பெரியார் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அன்பரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 3½ லட்சம் சத்துணவு– அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் மற்றும் 21–மாத கால ஊதிய நிலுவைத்தொகையை அளிக்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56–ஐ ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ சார்பில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், நீதிபதிகளுக்கு ஊதிய நிலுவைத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக எழுத்துபூர்வ அறிக்கையை வருகிற ஜனவரி மாதம் 5–ந்தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 7–ந்தேதி இதுதொடர்பாக பதிலளிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டு மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் வருகிற ஜனவரி மாதம் 7–ந்தேதி வரை போராட்ட நடவடிக்கைகளை தள்ளி வைத்து உள்ளோம். அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வருகிற ஜனவரி மாதம் 7–ந்தேதி நிர்வாகிகள் ஒன்றுகூடி அடுத்த கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்துவது தொடர்பான முடிவை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பொன்ரத்தினம், கவுரன், சேகர் உள்படநிர்வாகிகள், அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story