வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 17 Dec 2018 4:15 AM IST (Updated: 17 Dec 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு வருவாய்த்துறை (குரூப்-2) நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சையது அபுதாகீர் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தனலிங்கம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நிலைய செயலாளர் இசக்கி வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஊதியக்குழுவில் வழங்கவேண்டிய 21 மாத ஊதிய குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும். நேரடி நியமன அலுவலர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய விகிதம் ரூ.9,300 நிர்ணயம் செய்ய வேண்டும். துணை வட்டாட்சியர் பதவி உயர்வுக்காக வருவாய் ஆய்வாளர் பயிற்சி காலத்தினை ஒரு வருடமாக குறைக்க வேண்டும்.

1-1-2019-ஐ மைய நாளாக கொண்டு வெளியிடப்படும் துணை ஆட்சியர் பட்டியலை நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு உரிய காலத்தில் வெளியிட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வருவாய் குறு வட்டங்களை ஒரு குறு வட்டத்திற்கு 10 கிராமம் என சீரமைத்து புதிய குறு வட்டங்களை உருவாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம்(ஜனவரி) 5-ந் தேதி அன்று வருவாய் உதவியாளர் முதல் மாவட்ட வருவாய் அதிகாரி வரை பங்கேற்கும் காத்திருப்பு உண்ணாவிரத போராட்டத்தை 10 மண்டலங்களில் நடத்துவது. மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தீர்மானங்களை விளக்கி மாநில பொதுச்செயலாளர் தர்மராஜ் பேசினார். மாவட்ட தலைவர் பழனிவேல், நிர்வாகிகள் சிவனேசன், ரவி, தமிழ் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் ரமேஷ் போஸ் நன்றி கூறினார்.

Next Story