சாலையில் தண்ணீர் ஊற்றியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாக கூறி தகராறு மளிகை கடைக்காரர் கத்தியால் குத்திக் கொலை கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது


சாலையில் தண்ணீர் ஊற்றியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாக கூறி தகராறு மளிகை கடைக்காரர் கத்தியால் குத்திக் கொலை கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2018 10:39 PM GMT (Updated: 16 Dec 2018 10:39 PM GMT)

பெங்களூருவில், சாலையில் தண்ணீர் ஊற்றியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததாக கூறி சண்டை போட்டதுடன், மளிகை கடைக்காரரை கத்தியால் குத்திக் கொலை செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் அருகே குருபரஹள்ளியில் வசித்து வந்தவர் மஞ்சுநாத்(வயது 55). இவர், தனது வீட்டையொட்டியே குருபரஹள்ளி சர்க்கிளில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று அதிகாலை 5 மணியளவில் தனது கடை முன்பாக கிடந்த குப்பைகளை அகற்றி மஞ்சுநாத் சுத்தம் செய்து கொண்டிருந்தார். பின்னர் தனது கடை முன்பாக உள்ள ரோட்டில் அவர் தண்ணீரை ஊற்றி விட்டார். அந்த சந்தர்ப்பத்தில் ராஜாஜிநகரை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஆகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் மஞ்சுநாத் கடை முன்பாக உள்ள ரோட்டில் சென்றார். அப்போது திடீரென்று ஆகாசின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரம் உருண்டது.

இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து ஆகாஷ் கீழே விழுந்தார். இதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடை முன்பாக தண்ணீர் ஊற்றி கொண்டிருந்த மஞ்சுநாத்திடம், நீங்கள் சாலையில் தண்ணீரை ஊற்றியதால் தான் நான் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழ நேரிட்டது என்று கூறி ஆகாஷ் சண்டை போட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக மஞ்சுநாத், ஆகாஷ் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. மேலும் மஞ்சுநாத்தை ஆகாஷ் தாக்கியுள்ளனர். இந்த நிலையில், திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மஞ்சுநாத்தை கண்மூடித்தனமாக ஆகாஷ் குத்தியதாக தெரிகிறது. இதில், வயிறு, கழுத்தில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார். இதை பார்த்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மகாலட்சுமி லே-அவுட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கிருந்து ஆகாஷ் தப்பிச் சென்றுவிட்டார்.

இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மஞ்சுநாத்தின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகளும் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு மஞ்சுநாத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.

போலீஸ் விசாரணையில், ராஜாஜிநகரை சேர்ந்த ஆகாஷ், மாரத்தஹள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை முடிந்ததும் மாரத்தஹள்ளியில் இருந்து குருபரஹள்ளியில் வசிக்கும் நண்பர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் ஆகாஷ் சென்றுள்ளார். அங்கு வைத்து தனது நண்பருடன் சேர்ந்து அவர் மதுஅருந்தியதாக தெரிகிறது. பின்னர் நண்பர் வீட்டிலேயே நள்ளிரவில் தங்கிய அவர், நேற்று அதிகாலையில் குருபரஹள்ளியில் இருந்து ராஜாஜிநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது தான், சாலையில் தண்ணீர் ஊற்றியது தொடர்பாக மளிகை கடைக்காரர் மஞ்சுநாத்திடம் தகராறு செய்து, அவரை கத்தியால் குத்தி ஆகாஷ் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், தப்பி ஓடிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆகாசை போலீசார் கைது செய்தார்கள். அவர் மீது மகாலட்சுமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story