சின்னசேலம் அருகே, தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
சின்னசேலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்னசேலம்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி பகுதியை சேர்ந்தவர் செங்கமலை. இவரது மகன் மணிகண்டன் (வயது 25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் பிரசாதம் வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பினார். பின்னர் அந்த பிரசாதத்தை சின்னசேலம் அருகே தென்செட்டியந்தலில் உள்ள உறவினரிடம் கொடுப்பதற்காக நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
சின்னசேலத்தை அடுத்த வாசுதேவனூர் அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது மணிகண்டன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த தரைப்பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story