கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானோர் எண்ணிக்கை 15-ஆக உயர்வு 7 பேரிடம் போலீஸ் விசாரணை


கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானோர் எண்ணிக்கை 15-ஆக உயர்வு 7 பேரிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 17 Dec 2018 4:31 AM IST (Updated: 17 Dec 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானோர் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் அமைந்துள்ளது கிச்சுகுத்தி மாரம்மா அம்மன் கோவில். இக்கோவிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோபுரத்தின் மீது கலசங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பக்தர்களுக்கு தக்காளி சாதம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

அந்த பிரசாதத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 7 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து சுருண்டு விழுந்து பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் வாந்தி-மயக்கம், வயிற்று வலி போன்றவற்றால் அவதி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மைசூரு, கொள்ளேகால், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டன. அதன்பேரில் மைசூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து சுலவாடி கிராமத்திற்கு 13 ஆம்புலன்சுகள் விரைந்து சென்றன. அந்த ஆம்புலன்சுகள் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் சாம்ராஜ்நகர், கொள்ளேகால், மைசூருவில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவ்வாறாக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 104 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் இச்சம்பவத்தில் சாவு எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது.

இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த முதல்-மந்திரி குமாரசாமி மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். அங்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பக்தர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் உடனடியாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதேபோல் கர்நாடக மாநில காங்கிரஸ் சார்பிலும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் பிரசாதம் சாப்பிட்ட நளினி என்ற பெண் பக்தர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் இந்த சம்பவத்தில் சாவு எண்ணிக்கை 13-ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் மைசூரு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த சாலம்மா(35), மகேஸ்வரி(29) என்ற 2 பெண் பக்தர்கள் பலியானார்கள். இதனால் இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் 26 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அதனால் சாவு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப் படுகிறது.

இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கிடையே நேற்று காலையில் சுகாதாரத்துறை மந்திரி சிவானந்த பட்டீல் மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவர் அங்கு சிகிச்சை பெற்று வரும் பக்தர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.

அந்த சந்தர்ப்பத்தில் அவரை சந்தித்த நிருபர்கள், ‘‘இச்சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆகிறது. 2 நாட்கள் கழித்து இப்போதுதான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். ஏன் இந்த காலதாமதம்’’ என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மந்திரி சிவானந்த பட்டீல், ‘‘நான் வராவிட்டால் என்ன?. முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் பல மந்திரிகள் இங்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார்களே?. அதை நீங்கள் கவனிக்கவில்லையா?’’ என்று கூறினார்.

அவர் கூறிய இந்த பதிலால் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு அங்கிருந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மந்திரி சிவானந்த பட்டீல், டாக்டர்களை சந்தித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். மேலும் தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்து-மாத்திரைகள் ஆகியவற்றை பெங்களூருவில் இருந்து கொண்டுவரவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து சாம்ராஜ்நகர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு தர்மேந்திர குமார் மீனா தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் ஏற்கனவே பிரசாதத்தில் விஷம் கலந்ததாக சின்னப்பி, மாதேஷ், சமையல்காரர் புட்டசாமி ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மேலும் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அவர்கள் சின்னப்பியின் மகன் லோகேஷ் மற்றும் பட்டா, வீரண்ணா, மகாதேவசாமி ஆகியோர் ஆவர். பிடிபட்ட 7 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விசாரணையில் துப்பு துலங்கி உள்ளது என்றும், முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தமிழகத்திற்கு சென்றுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, சின்னப்பியின் மகன் லோகேஷ் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.

அதன்மூலம் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள பிரம்மேஸ்வரி அம்மன் கோவிலில் பூசாரியாக செயல்பட்டு வரும் காலப்பா என்பவருக்கும், பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் பலியான சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தமிழகத்திற்கு சென்று காலப்பாவை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்று கூறப் படுகிறது. இதனால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரை விரைவில் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று தெரிகிறது.

Next Story