ஈரோட்டில் பொதுமக்கள் –போலீசார் மீது கல்வீசி தாக்கிய வாலிபரால் பரபரப்பு
ஈரோட்டில் பொதுமக்கள் மற்றும் போலீசார் மீது கல் வீசி தாக்கிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு ரெயில் நிலையம் முன்பு உள்ள வளாக பகுதியில் பிச்சை எடுப்பவர்கள் மற்றும் ஆதரவற்றோர்கள் சிலர் தங்கி உள்ளனர். அவர்கள் ரெயில் நிலையத்துக்குள் செல்லும் நடைபாதை பகுதியில் பகலிலும், இரவிலும் படுத்து தூங்குவது வழக்கம். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் வந்தது.
இதைத்தொடர்ந்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் நேற்று அங்கு சென்று அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு படுத்து தூங்கிக்கொண்டு இருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஆத்திரம் அடைந்து திடீரென கீழே கிடந்த கற்களை எடுத்து அந்த வழியாக வந்த பொதுமக்கள் மீது கல்வீசி தாக்க தொடங்கினார்.
இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அந்த வாலிபர் போலீசார் மீதும் கற்களை எடுத்து வீசினார். இதனால் போலீசாரும் அச்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த பெண் ஒருவர் ஓடிவந்து, இது என் மகன் தான். மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவன் பொதுமக்கள் மீது கல்வீசி உள்ளான். எனவே அவனை மன்னித்து விடுங்கள்’ என்றார். அதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை அந்த பெண்ணுடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ரெயில் நிலையம் முன்பு நேற்று பரபரப்பு ஏற்பட்டது.