கடம்பூரில் குண்டும், குழியுமான சாலை; சீரமைக்க மலைவாழ் மக்கள் வேண்டுகோள்


கடம்பூரில் குண்டும், குழியுமான சாலை; சீரமைக்க மலைவாழ் மக்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 17 Dec 2018 5:06 AM IST (Updated: 17 Dec 2018 5:06 AM IST)
t-max-icont-min-icon

கடம்பூரில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலத்தை அடுத்த மலைப்பகுதியில் கடம்பூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த கிராமத்தில் இருந்து ஏரியூர், கல் கடம்பூர், மூலக்கடம்பூர், நடூர், மல்லியம்மன் துர்க்கம் ஆகிய மலைக்கிராமங்களுக்கு செல்ல ரோடு ஒன்று உள்ளது. இந்த ரோடு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது இந்த ரோடு பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த ரோட்டின் வழியாக வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘கடம்பூரில் இருந்து ஏரியூர் செல்லும் ரோட்டில் உள்ள கற்கள் பெயர்ந்தாலும், மழைக்காலத்தில் அரிப்பு ஏற்பட்டதாலும் குண்டும், குழியுமாக உள்ளது.

இந்த ரோட்டின் வழியாக தினமும் ஏராளமானோர் கிராம நிர்வாக அலுவலகம், கால்நடை ஆஸ்பத்திரி, அரசு மேல்நிலைப்பள்ளி, வனக்குடியிருப்பு போன்றவற்றுக்கு சென்று வருகிறார்கள்.

இந்த ரோட்டின் வழியாக பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆனால் இரு சக்கர வாகனங்கள், சரக்கு ஆட்டோ, லாரி போன்ற வாகனங்கள் சென்று வருகின்றன. ரோடு குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது.

மேலும் மழைக்காலங்களில் வாகனங்கள் ரோட்டில் உள்ள குழியில் சிக்கி விடுகிறது. எனவே இந்த ரோட்டை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Next Story