தாராபுரத்தில் அதிகாரிகள் சோதனை, ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு


தாராபுரத்தில் அதிகாரிகள் சோதனை, ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 17 Dec 2018 3:45 AM IST (Updated: 17 Dec 2018 5:23 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 கடைகளுக்கும் ‘சீல்’ வைத்தனர்.

தாராபுரம், 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்புதுறை துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலமுருகன், ராமச்சந்திரன், சதீஸ், லியோ ஆண்ட்ரூஸ், லோகநாதன், மணி, எட்டிக்கன், கேசவராஜ் ஆகியோர் தாராபுரம் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

உடுமலை சாலையில் உள்ள தினசரி மார்க்கெட் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பீகார் மாநிலத்தை சேர்ந்த சில வாலிபர்கள், மளிகை பொருள் வாங்குவதற்காக தினசரி மார்க்கெட்டிற்கு வந்துள்ளனர். அப்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அந்த வாலிபர்களை கண்காணித்தபோது, அவர்கள் தளவாய்பட்டிணத்தை சேர்ந்த அபுதாகீர் (வயது 55) என்பவருக்கு சொந்தமான, ஏ.ஆர்.மளிகை கடைக்கு சென்றுள்ளனர். அவர்களை கண்டதும் கடை உரிமையாளர் அபுதாகீர், கடையின் பின்பக்க கதவை திறந்து உள்ளே அழைத்துள்ளார். பிறகு அந்த வாலிபர் களுக்கு புகையிலை பாக்கெட்டுகளை மொத்தமாக விற்பனை செய்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அபுதாகீர் கடைக்குள் சென்று அவரை கையும் களவுமாக பிடித்துவிட்டனர்.

பிறகு கடையில் இருந்த சுமார் 2 மூடை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் பிறகு அதிகாரிகள் அபுதாகீரிடம் நடத்திய விசாரணையில், அபுதாகீர் கொடுத்த தகவலின் பேரில் சின்னக்கடைவீதி அருகே உள்ள நேதாஜி தெருவில், குஜராத்தைச் சேர்ந்த போஷாம்ராம் (34), ஆஷாராம் (25) ஆகியோருக்குச் சொந்தமான அபேஷ்வரா கடையை சோதனையிட்டனர்.

அங்கும் புகையிலை பொருட்களை மொத்த விற்பனை செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதை கண்டறிந்தனர். மேலும் இந்த அபேஷ்வரா கடை முறையாக உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

அதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அபேஷ்வரா கடையை பூட்டி ‘சீல்’ வைத்தனர். அதன் பிறகு தினசரி மார்க்கெட்டில் வடக்குத் தெருவை சேர்ந்த செல்வம் என்பவருக்குச் சொந்தமான பெட்டிக்கடையிலும், அதே பகுதியில் உள்ள அவரது குடோனிலும் மூடை மூடையாக புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதிகாரிகள் அவைகளை பறிமுதல் செய்து, செல்வத்தின் கடையை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

இந்த அதிரடி நடவடிக்கை குறித்து, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதிகாரி கூறியதாவது:-

தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு புகையிலையை உபயோகிக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்தது. இவர்களுக்கு எங்கிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை கிடைக்கிறது என்பதை ஆய்வு செய்தோம். அவர் களை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். அந்த வகையில் தினசரி மார்க்கெட்டில் இருந்த 2 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதும், விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது. செல்வம் மற்றும் அபுதாகீர் ஆகியோர் கடைகளில் சுமார் 300 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story