என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு, கம்மாபுரம் பகுதி மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கம்மாபுரம் பகுதி மக்கள் தங்களது வீடு மற்றும் மின்கம்பங்கள், மரங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
கம்மாபுரம்,
நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இங்குள்ள சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுத்து மின்சாரம் உற்பத்தி செய்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 3-வது சுரங்கத்தை கம்மாபுரம் பகுதியில் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக நடந்த கருத்துகேட்பு கூட்டத்திலும் மக்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்தனர்.
இந்த நிலையில் கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கம்மாபுரம், சிறுவரப்பூர், க.புத்தூர், ஓட்டிமேடு, சாத்தப்பாடி, பெருந்துரை, பெருவரப்பூர், விளக்கப்பாடி, தர்மநல்லூர், ஊ.அகரம், கோபாலபுரம், சு.கீணனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்று சிறுவரப்பூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன் வரவேற்றார்.
கூட்டத்தில், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலங்களையும், குடியிருப்புகளையும் கையகப்படுத்தி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கிராமங்களில் ஆங்காங்கே என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ பேக் என்.எல்.சி. எனவும், என்.எல்.சி. நிர்வாகமே எம் நிலத்தின் கைப்பிடி மண்ணை கூட இனி உனக்கு தரமாட்டோம் என்றும் டிஜிட்டல் பேனர்களை வைத்தனர். மேலும் தங்களது வீடுகள் மற்றும் மின்கம்பங்கள், மரங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story