புதுவையில் கடல் சீற்றம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


புதுவையில் கடல் சீற்றம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 17 Dec 2018 1:38 AM GMT (Updated: 17 Dec 2018 1:38 AM GMT)

புதுவையில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடும் பனிமூட்டத்தால் ஐதராபாத் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

புதுச்சேரி,

வங்கக்கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே இன்று (திங்கட் கிழமை) கரையைக் கடக்கிறது. இதையொட்டி தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்தநிலையில் புதுவை துறைமுகத்தில் நேற்று முன்தினம் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. புதுவையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடனேயே காணப்பட்டது. பலத்த காற்று வீசியதுடன், வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்கள் படகுகளை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

மோசமான வானிலை காரணமாக ஐதராபாத்தில் இருந்து புதுவைக்கு காலை 11.20 மணிக்கு வர வேண்டிய விமானம் 1 மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக மதியம் 1 மணிக்கு வந்து சேர்ந்தது.

காலை 11.40 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் மதியம் 1.20 மணிக்கு, அதாவது 1 மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக புதுவையில் இருந்து புறப்பட்டுச்சென்றது.

காரைக்காலிலும் நேற்று பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. கடலோர மீனவ கிராமங்களில் 20 அடி முதல் 40 அடிவரையிலும் காரைக்கால் கடற்பகுதியில் 100 மீட்டர் தூரம் வரை கடல் நீர் வெளியேறி இருந்தது.

கடல் சீற்றம் காரணமாக 3-வது நாளாக நேற்றும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Next Story