உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுவது தவறு; கல்லூரி மாணவர்களுக்கு நாராயணசாமி அறிவுரை


உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுவது தவறு; கல்லூரி மாணவர்களுக்கு நாராயணசாமி அறிவுரை
x
தினத்தந்தி 17 Dec 2018 1:45 AM GMT (Updated: 17 Dec 2018 1:43 AM GMT)

உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுவது மிகப்பெரிய தவறு என்று கல்லூரி மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுரை வழங்கினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டுபவர்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு உடனடி அபராதம் (ஸ்பாட் பைன்) விதிக்கும் படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனைகள் நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர். போக்குவரத்து போலீசார் மட்டுமின்றி சட்டம்-ஒழுங்கு போலீசாரும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை புதுவையில் இருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். கிழக்கு கடற்கரை சாலையில் காலாப்பட்டு என்ஜினீயரிங் கல்லூரி அருகில் போலீசார் வாகன சோதனை நடத்திக்கொண்டு இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பொதுமக்களும், கல்லூரி மாணவ - மாணவிகளும் வாகனங்களோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த உடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது கார் டிரைவரிடம் காரை நிறுத்தும் படி கூறினார். பின்னர் காரில் இருந்து இறங்கி வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் சென்று விசாரித்தார். வாகன சோதனை என்ற பெயரில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது. முதல் முறையாக விதிமுறைகளை மீறுவோரை எச்சரித்து அனுப்பவேண்டும். 2-வது முறை விதிகளை மீறினால் அவர்களுக்கு அபராதம் விதியுங்கள் என்றார்.

பின்னர் அங்கு நின்றிருந்த கல்லூரி மாணவர்களிடம் வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுவது மிகப்பெரிய தவறு என்று அறிவுரை கூறினார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்னை சென்றார்.

போலீசாரின் வாகன சோதனையின்போது முதல்-அமைச்சரே நேரடியாக வந்த அறிவுரை கூறியது மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வியப்பாக இருந்தது.

Next Story