ஆற்றில் மூழ்கி பி.எஸ்.என்.எல். ஊழியர் சாவு மது போதையில் குளிக்க சென்ற போது பரிதாபம்


ஆற்றில் மூழ்கி பி.எஸ்.என்.எல். ஊழியர் சாவு மது போதையில் குளிக்க சென்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 18 Dec 2018 4:30 AM IST (Updated: 17 Dec 2018 8:27 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே மது போதையில் குளிக்க சென்ற பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே ஞாறாம்விளை பகுதியை சேர்ந்தவர் புருசோத்தமன். இவருடைய மகன் ராஜன் (வயது 24). மார்த்தாண்டத்தில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை ராஜன் வீட்டைவிட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்ப வரவில்லை. இதனால் அவரது பெற்றோரும், உறவினர்களும் அவரை தேடினர்.

அப்போது, ராஜனும், அவரது நண்பரும் ஞாறாம்விளை பகுதியில் ஆற்றங்கரையோரம் அமர்ந்து மது அருந்தியதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆற்றங்கரைக்கு சென்று பார்த்த போது, ராஜனின் ஆடைகள் கரையோரம் இருந்தன. ஆனால், அவரையோ, அவரது நண்பரையோ காணவில்லை.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், ராஜனுடன் அமர்ந்து மது அருந்திய நண்பரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜனும் அவரது நண்பரும் ஆற்றங்கரையோரம் சுடுகாட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

போதை அதிகமான நிலையில் இருவரும் வீட்டுக்கு புறப்பட தயாரானார்கள். அப்போது ராஜன்         ஆற்றில் குளிக்க      செல்வதாக  கூறியுள்ளார். இதை யடுத்து நண்பர் மட்டும் தனியாக வீட்டுக்கு சென்றார். ஆற்றில் அதிக போதையில் குளிக்க இறங்கிய ராஜன் தண்ணீரில் மூழ்கியது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து குழித்துறை தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் ஞாறாம்விளை பகுதிக்கு சென்று படகு மூலம் ஆற்றுக்குள் இறங்கி ராஜனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று 2–வது நாளாக தேடும் பணி நடந்தது. நீண்ட தேடுதலுக்கு பின்பு பிற்பகல் 3 மணியளவில் ராஜனின் பிணம் மீட்கப்பட்டது. அவரது பிணத்தை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story