கிருஷ்ணகிரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டம்


கிருஷ்ணகிரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2018 3:45 AM IST (Updated: 17 Dec 2018 9:47 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் காவேரிப்பட்டணம் மற்றும் கொத்தப்பள்ளி கிளை சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் ராமசாமி மற்றும் வட்டத் தலைவர் ரங்கநாதன் ஆகியோர் கூட்டுத் தலைமை தாங்கினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, கட்டுமான சங்க மாவட்டத் துணைத்தலைவர் மதன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேசியதாவது:-

காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகரில் வசிக்கும் ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு சாதிச்சான்று, ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை, இடத்துடன் கூடிய பட்டா ஆகியவற்றை வழங்க வேண்டும். காவேரிப்பட்டணம் தபோவனம் பகுதியில் வசித்து வரும் இருளர் இனத்தைச் சேர்ந்த 11 குடும்பங்களுக்கு எந்த அடிப்படை வசதியும், சாதி சான்று உள்ளிட்ட எந்த சான்றுகளும் இல்லாமல் அகதி போல் வாழ்கின்றனர். எனவே அவர்களுக்கு அனைத்து சான்றுகளும் வழங்கி வீட்டுமனை வழங்க வேண்டும்.

அதேபோல், வேப்பனப்பள்ளி ஒன்றியம் எண்ணேகொள் பஞ்சாயத்து கொத்தப்பள்ளி கிராம போயர் இன மக்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கே.ஆர்.பி. அணைக்கட்ட நிலம் கொடுத்தனர். ஆனால் இன்றுவரை இவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. எனவே வீட்டுமனையுடன் கூடிய பட்டா வழங்க வேண்டும். மேலும் சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை ஏற்படுத்தித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நஞ்சுண்டன், ராஜா, ஜெய்சங்கர், ரங்கநாதன், மனோகரன், எத்திராஜ், குணசேகரன், சண்முகம், செல்வராஜ், வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story