திருமண மண்டபத்தை திறக்க வலியுறுத்தி ஊர்வலமாக செல்ல முயன்றவர்கள் தடுத்து நிறுத்தம் - போலீசார் குவிப்பு
ஓடைப்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை திறக்க வலியுறுத்தி ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
சின்னமனூர்,
சின்னமனூர் அடுத்துள்ள ஓடைப்பட்டியில் வசித்து வரும் ஒரு பிரிவினர் பேரூராட்சி அலுவலக கட்டிடத்தின் பின்புறத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் திருமண மண்டபம் கட்டும் பணியை தொடங்கினார்கள். இதற்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் திருமண மண்டபம் கட்டப்பட்ட இடத்திற்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என்று மண்டபம் கட்டும் பிரிவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது மண்டபம் கட்டும் பணி முடிவடைந்துள்ளது. கடந்த 14-ந்தேதி மண்டபத்தை திறக்க உள்ளதாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவிடம் புகார் மனு அளித்தனர்.
அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்தி நாதனுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சப்-கலெக்டர் மண்டபம் கட்டிய பிரிவினரை அழைத்து, வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட மண்டபத்தை திறக்க கூடாது என்றும். திருமண மண்டபம் கட்டப்பட்ட இடத்திற்கு உரிய பணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் திருமண மண்டபம் கட்டியவர்கள் மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவை நேரில் சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஓடைப்பட்டியில் அந்த பிரிவை சேர்ந்தவர்கள் திரண்டு திருமண மண்டபத்தை திறக்க வலியுறுத்தி தேனிக்கு ஊர்வலமாக செல்கிறோம் என்று அறிவித்தனர். இதையடுத்து தேனி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுருளிராஜ், உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதையடுத்து ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ஊர்வலமாக செல்ல முயன்றவர்களில் முக்கிய நிர்வாகிகளை உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு அழைத்து பேசினார். அப்போது ஊர்வலம் செல்ல முறையாக அனுமதி பெறவேண்டும். எனவே உங்களின் கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவிக்க 10 பேரை தேர்வு செய்து அவர்கள் மட்டும் மனு கொடுக்க செல்லுங்கள் என்று அறிவுறுத்தினார். இதை ஏற்றுக்கொண்டு முக்கிய நிர்வாகிகள் 10 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகம் செல்ல ஒப்புக்கொண்டனர்.
அப்போது கலெக்டரை நிர்வாகிகள் சந்தித்து மனு கொடுத்து விட்டு ஓடைப்பட்டி வரும் வரை நாங்கள் இங்குதான் அமர்ந்து இருப்போம் என்று கூறி அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் மற்றவர்கள் அமர்ந்து இருந்தனர். அங்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் 10 பேர் கலெக்டர் பல்லவிபல்தேவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் திருமண மண்டபம் கட்டப்பட்ட இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், அந்த நிலத்திற்கு அரசு குறைவான இழப்பீட்டு தொகையை நிர்ணயிக்க வேண்டும், அந்த பணத்தை கட்ட தயாராக இருக்கிறோம் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
பின்னர் நிர்வாகிகள் ஓடைப்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்த விவரத்தை தெரிவித்தனர். இதையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story