புதிய வாக்காளர் பட்டியல் ஜன.4-ந் தேதி வெளியிடப்படும் புள்ளியல் துறை ஆணையர் அதுல் ஆனந்த் தகவல்
புதிய வாக்காளர் பட்டியல் ஜனவரி 4-ந் தேதி வெளியிடப்பட உள்ளதாக, அரசு புள்ளியல்துறை ஆணையர் அதுல் ஆனந்த் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான ஆய்வுகூட்டம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் அதுல் ஆனந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் அதுல் ஆனந்த் பேசியதாவது;-
இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் 1.1.2019 அன்று தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பிழையில்லாத வகையில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விடுபட்டுள்ள வாக்காளர்கள் குறித்து எடுக்கப்பட்ட பட்டியலுக்கும், தற்போது படிவம் 6 பெறப்பட்டுள்ளதற்கும் சரிபார்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர், சேர்ப்பவர்களை தங்கள் குடும்ப நபர்களின் வரிசையில் இணைக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் 18 வயது பூர்த்தியான அனைவரையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள 1,593 வாக்குச்சாவடி மைய கட்டிடத்தின் புகைப்படத்தினை தேர்தல் ஆணைய இணையதளத்தில் விரைந்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளது என சான்றளிக்க வேண்டும். குறைபாடுகள் ஏதும் இருப்பின் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். எனவே இதில் மிகுந்த கவனத்துடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். புதிய வாக்காளர் பட்டியல் ஜனவரி 4-ந் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே சரிபார்க்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஆல்பிஜான்வர்க்கீஸ், உதவி கலெக்டர்கள் சிம்ரான் ஜீத் சிங் கலோன், கோவிந்தராசு, விஜயா, தேர்தல்பிரிவு தனி தாசில்தார் நாகராஜன் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story