நெடுஞ்சாலை தடுப்புச்சுவர்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை - திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. எச்சரிக்கை


நெடுஞ்சாலை தடுப்புச்சுவர்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை - திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 Dec 2018 7:09 PM GMT (Updated: 17 Dec 2018 11:43 PM GMT)

நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல்,

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தை தடுக்கும் விதமாக சாலைகளின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் எதிர் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளால் கண் கூசுவதை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் செடிகள் வளர்க் கப்படுகின்றன. இதனை தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பொறுப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் ஓரளவு மழை பெய்தது. இதனால் சாலையின் நடுவே உள்ள செடிகள் நன்கு வளர்ந்துள்ளன. மேலும் அவற்றின் இடையே புற்களும் செழித்து வளர்ந்துள்ளன. இதனால் சாலையோரம் உள்ள ஊர்களை சேர்ந்தவர்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுகின்றனர்.

அவை நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள புற்களை மேய்கின்றன. மேலும் சிலர் கால்நடைகளை சாலையின் நடுவே உள்ள புற்களை மேயும் வகையில் கட்டிவிட்டு செல்கின்றனர். கால்நடைகள் சாலையை குறுக்கும் நெடுக்குமாக கடப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

சாலையோர ஊர்களை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதிக்கு செல்லும் வகையில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர்களை சேதப்படுத்தி பாதை அமைத்துள்ளனர். அந்த வழியாக சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படுகிறது. இந்த நிலையில் சாலையில் உள்ள தடுப்புச்சுவர்களை சேதப்படுத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகளின் நடுவே செடிகள் நடப்பட்டுள்ள பகுதிகளில் சிலர் கால்நடைகளை மேய்ப்பதால் விபத்துகள் நடக் கின்றன. இனிவரும் காலங் களில் அதுபோன்ற செயல் களில் கால்நடை வளர்ப்போர் ஈடுபடக்கூடாது. அதையும் மீறி சாலையின் நடுவே ஆடு, மாடுகளை மேயவிட்டால், அவை பறிமுதல் செய்யப்படும்.

மேலும் சிலர் சாலையோர மற்றும் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர்களை சேதப்படுத்தி பாதை அமைத்துள்ளனர். இவ்வாறு தடுப்புச்சுவர்களை சேதப்படுத்துவது குற்றமாகும். போலீசார் அந்த பகுதிகளை கண்காணித்து பாதையை அடைத்தாலும், அந்த இடத்தில் மீண்டும் பாதை அமைக்கின்றனர். நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இனிவரும் காலங்களில் அதுபோல தடுப்புச்சுவர்களை சேதப்படுத்தி பாதை அமைப்பவர் கள் மீது பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

சாலை விதிகளை பின்பற்றாததால் அதிக அளவு விபத்துகள் நடக்கின்றன. அதிவேகம், வளைவுகளில் முந்தி செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால் தான் பெரும்பாலான விபத்துகள் நடக்கிறது. இவ்வாறு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் வழக்குகளும் பதிவு செய்யப்படுகின்றன.

இதேபோல், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவதாலும் விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதால், விபத்தில் சிக்கினாலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story