பொல்லானுக்கு நினைவு சின்னம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்; சங்கு ஊதியபடி வந்து பல்வேறு கட்சியினர் மனு


பொல்லானுக்கு நினைவு சின்னம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்; சங்கு ஊதியபடி வந்து பல்வேறு கட்சியினர் மனு
x
தினத்தந்தி 18 Dec 2018 4:30 AM IST (Updated: 18 Dec 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

பொல்லானுக்கு நினைவு சின்னம் அமைக்க அனுமதி வழங்க கோரி, ஈரோட்டில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சங்கு ஊதியபடி வந்து பல்வேறு கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் மயில் துரையன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக சங்கு ஊதியபடியும், மணி அடித்தபடியும் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, ‘சங்குடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை’ என்றனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் தாங்கள் கொண்டு வந்த சங்குகளை வெளியில் வைத்துவிட்டு கலெக்டர் கதிரவனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திர குலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய 7 பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும். அந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று நாங்கள் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

ஆனால் இன்றுவரை எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால் எங்கள் சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல் உள்ளது. எனவே எங்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலனை செய்து மேற்கண்ட 7 பிரிவுகளையும் தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், ரே‌ஷன் கடையில் வழங்கப்பட்ட தூசி கலந்த, தரமற்ற கோதுமையை ஒரு பையில் கொண்டு வந்து கலெக்டரிடம் வழங்கினார். அந்த கோதுமையை வாங்கி பார்த்த கலெக்டர் அதை தன்னுடைய செல்போனில் படம் எடுத்துக்கொண்டார். பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சிவகிரி அருகே உள்ள பொரசமேட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், எங்கள் பகுதியில் நின்றிருந்த அரசுக்கு சொந்தமான 28 வேம்பு மற்றும் பனை மரங்களை தனியார் ஒருவர் வெட்டி விற்பனை செய்ய முயன்றார். அதை நாங்கள் தடுத்து விட்டோம். எனவே அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்ட முயன்றவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

தி.மு.க. பகுதி செயலாளர் ராமு தலைமையில் ஈரோடு கோட்டை பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கொடுத்திருந்த மனுவில், ‘ஈரோடு மேட்டூர் ரோட்டில் நடந்து வரும் மழைநீர் வடிகால் மாற்றுத்திட்டத்தை கோட்டை பகுதி நோக்கி திருப்பி விடக்கூடாது’ என்று கூறி இருந்தனர்.

பாரதீய ஜனதா கட்சியின் பெருந்துறை ஒன்றிய தலைவர் சசிதயாள் கொடுத்திருந்த மனுவில், ‘பொதுமக்கள் நலன் கருதி பட்டக்காரன்பாளையத்தில் புதிதாக ரே‌ஷன் கடை கட்டவேண்டும்’ என்று கூறி இருந்தார்.

கோபி அருகே உள்ள அளுக்குளி பகுதியை சேர்ந்த பழனியம்மாள் என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘மாற்றுத்திறனாளியான எனக்கு பெருமாள்கோவில் தோட்டம் பகுதியில் வாகனம் நிறுத்தும் இடம் உள்ளது. இந்த இடத்துக்கு செல்லும் பொதுப்பாதையை தனியார் ஒருவர் அடைத்து வைத்து தகராறு செய்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

பொல்லான் வரலாறு மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.வடிவேல் தலைமையில், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சதீஸ்பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, ஜெகஜீவன்ராம் ஜனநாயக மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகம், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் வீரகோபால் உள்பட பல்வேறு கட்சி சார்பில் தனித்தனியாக கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டன.

அந்த மனுக்களில், ‘சுதந்திர போராட்ட வீரர் பொல்லான், அறச்சலூர் அருகே உள்ள நல்லமங்காபாளையத்தில் ஆங்கிலேயர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த இடத்தில் அவருக்கு பொதுமக்கள் சார்பில் நினைவு சின்னம் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 327 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கதிரவன், அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பிரபாவதி, மாவட்ட வழங்கல் அதிகாரி ஜெயராமன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


Next Story